வியாழன், 11 டிசம்பர், 2014

உடல் எடை குறையும்...ஆனா குறையாது!

‘ஒரே வாரத்தில், ஒரே மாதத்தில் உடல் எடையைக் குறைக்கலாம். கட்டான உடலைப் பெறலாம்’ என உணவுகளையும், உபகரணங்களையும் விளம்பரப்படுத்தி மக்களை நம்ப வைக்க களம் இறங்கியிருக்கின்றன சில நிறுவனங்கள். இவையெல்லாம் உடல் எடையைக் குறைத்து விடுமா? இதனைத் தொடர்ந்து சாப்பிட்டால் உண்மையிலே உடலை இளைக்க வைக்க முடியுமா? உடல் எடையைப் பற்றின தவறான கருத்துகளைப் பற்றி விளக்குகிறார் ஊட்டச்சத்து நிபுணரான ரேஷ்மியா.

பெல்ட்!


டெலி ஷாப்பிங் நிறுவனங்கள் சில மாடல்களைக் காண்பித்து இந்தப் பெல்ட்டை நீங்கள் நிற்கும் போதோ, உட்காரும் போதோ அரை மணி நேரம் வயிற்றில் கட்டி கொண்டாலே போதும். தொப்பை குறைந்து 3 வாரங்களிலே அழகான இடையைப் பெறலாம் என்கிறது.

நம் உடலில் பல்வேறு இடங்களில் கொழுப்புத் தேங்கியிருக்கும். அதை மொத்தமாகக் குறைக்க முடியுமே தவிர, குறிப்பிட்ட பகுதியில் மட்டும் பெல்ட் அணிந்து கொழுப்பை குறைக்க முடியும் என்பதில் உண்மை இல்லை. வயிற்றைச் சுற்றி கட்டியிருப்பதால் உடல் சூடாவதன் மூலம் வியர்க்குமே தவிரக் கலோரிகளை எரிக்காது. இதனால் உடல் சூடு, சூடு கட்டிகள், வெள்ளைப்படுதல் போன்ற பிரச்னைகள்தான் வரும். கொழுப்பு நீங்காது. பிரசவித்த பெண்களுக்கு இடுப்புக்குக் கீழ் காற்றுப் போகக் கூடாது என்று சொல்லப்படுவதால், அந்த நேரத்தில் மட்டும் பெல்ட்டை அணிவதால் பலனிருக்கும். மற்றபடி கொழுப்பை கரைக்கவோ எரிக்கவோ பெல்ட் பயன்படாது.

கொழுப்பு நீக்கப்பட்ட பால் /  பேக்டு சிப்ஸ்

கடைகளில் வாங்கும் போது கொழுப்பு நீக்கப்பட்ட பால் எனப் பார்த்து பார்த்து வாங்குவோர் உண்டு. இந்தக் காலத்தில் இதைப் பயன்படுத்துவது ஒரு கவுரவ அடையாளமாகவே ஆகிவிட்டது. ஆனால், இதில் உள்ள ஆபத்து நம்மைப் புற்று நோயாளியாக மாற்றவும் செய்கிறது. கொழுப்பை நீக்கிவிட்டு செயற்கையான சில உட்பொருள்களைப் பாலுடன் சேர்கின்றனர். விளைவு வயிற்று போக்கு, மந்தமின்மை உருவாகிறது.  நல்லதா என்பது இப்போது புரிந்திருக்கும்.

அடுத்ததாகச் சாதாரணச் சிப்ஸில் கலோரிகள் அதிகமாக உள்ளது என பேக்டு சிப்ஸை விளம்பரப்படுத்துகின்றனர். உருளையை 120 டிகிரி வெப்ப நிலையில் பொரிக்கும்போது, அதில் உள்ள சர்க்கரையும், ஆஸ்பராகெனும் (Asparagine) சேர்ந்து அக்கிரலமைட் (Acrylamide) என்ற புற்று நோய் காரணியை உருவாக்கும். இதனால் புற்றுநோய் வர வாய்ப்புண்டு. சாதாரண சிப்ஸைவிடப் பேக்டு சிப்ஸில் அக்கிரலமைட் அதிகமாக உருவாகிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

ஹெல்தி பிஸ்கட்

இந்த வகைப் பிஸ்கட்டில் வைட்டமின், நார்ச்சத்து, புரோட்டீன் அதிகம் உள்ளதாகச் சொல்கின்றனர். சர்க்கரை நோயாளிகள் இந்தப் பிஸ்கட் சாப்பிடலாம் என்றே பரிந்துரைக்கின்றனர். சாதாரணப் பிஸ்கட்டிலும், ஊட்டச்சத்துகள் நிறைந்த பிஸ்கட்டிலும் சேர்க்கப்படுவது ஒன்றுதான். ரீபைன் மாவு, சர்க்கரை, பேக்கிங் பவுடர், உப்பு, எண்ணெய், வெண்ணெய், சுவையூட்டிகளும் தான். இதில் பெரிய அளவில் மாற்றம் இல்லை என்றாலும், கூடுதலாக முந்திரியும், பாதாமும் மட்டுமே சேர்க்கப்படுகின்றன. கூடுதலாக ஊட்டச்சத்துப் பிஸ்கட்டில் ஹைட்ரோஜினேட்டட் ஆயில், சாச்சுரேட்டட் கொழுப்பு இருப்பதால் உடல் பருமன், சர்க்கரை நோய், இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வர அதிக வாய்ப்புகள் உண்டு.

ஆயுர்வேத பொருட்கள்

பாரம்பரியம் என்ற பெயரில் உள்நுழைந்து ஏமாற்றுவதற்கான ஒரு போலி மருந்து மூலிகை பவுடர். இயற்கையானது என்று சொல்ல கூடிய பொருட்களின் கவரில் உள்ள பட்டியலை பார்த்தால் உள்ளே இருப்பது இயற்கையா, செயற்கையா என்பதைத் தெரிந்து கொள்ளலாம். பழங்கள், கீரைகள், காய்கறிகள் மட்டுமே இயற்கையின் படைப்பு அதை மருந்தாக்குகிறோம் என்ற பெயரில் கலக்கப்படுவதும், சேர்க்கப்படுவதும், பதப்படுத்தப்படுவதும் மூலிகையாகாது. இதனால் எந்தப் பலனும் இல்லை.

உடல் எடையைக் குறைக்கும் பவுடர்

புதிய பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி படையெடுப்பது இந்த உடல் எடையைக் குறைப்பதற்கான பவுடரின் மூலம்தான். தண்ணீரில், இந்தப் பவுடர் கலந்து குடித்தால் கொழுப்பை கரைக்க முடியும் என்கின்றனர். இதுவரையில் எவரேனும் இப்படிக் குடித்து உடல் இளைத்தார்களா என்று பரிசோதித்துப் பார்த்தால், அவருக்கு வேறு ஏதேனும் பிரச்னை இருக்குமே தவிர, இந்தப் பவுடரினால் எந்தப் பலனும் இருக்காது. இந்தப் பவுடர் நீரால், அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும் என்பதால், உடலில் உள்ள கொழுப்பு நீங்கிவிடும் என்று சிலர் தவறாக நினைக்கின்றனர். ஆனால், உடலில் நீரிழப்பு அதிகமாகி உடல் பலவீனமடையும். எப்போதுமே மயக்க நிலையில் இருப்பது போல உணர்வீர்கள்.

பருமனுக்கு முன்... பருமனுக்குப் பின்...

எந்த நாளிதழை எடுத்தாலும் முன்பு இருந்த நான், இப்போது உடல் இளைத்து அழகான தோற்றமுடன் இருக்கிறேன் என்று விளம்பரம் செய்கின்றனர். போட்டோ ஷாப் என்ற மென்பொருளால் ஒட்டுமொத்த உருவத்தையே மாற்ற முடியும் என்பதை மறக்க வேண்டாம். அப்படி இருக்கும் தொழில்நுட்பங்களை நம்பி உடல் இளைக்கும் மையத்தை நோக்கி செல்வது உடலை இளைக்க வைக்காது. பதிலாகப் பர்ஸ் தான் இளைத்துப் போகும்.

இவையெல்லாம் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் இருப்போரின் தந்திரம்தானே தவிர உடலுக்கு நன்மை செய்திடாது. அன்றாட வாழ்க்கை முறையில் சிறு சிறு மாறுதல்களைச் செய்து கொண்டாலே மெலிந்த அழகான, ஆரோக்கியமான கட்டுடலை பெறலாம்.

யோகா, தியானம் என முன்னோர்கள் விட்டு வைத்திருப்பதைத் தேடி கற்றுக் கொள்ளுங்கள். இயற்கையாக விளைந்த உணவுகளை மட்டும் சாப்பிடுவேன் என உறுதி மொழி எடுங்கள். சிறிய தூரத்துக்குக் கூட வாகனத்தை எதிர்பார்க்காமல் நடந்து செல்ல பழகுங்கள். முன் தூங்கி, முன் எழும் பழக்கத்துக்கு மாறுங்கள். பாரம்பரிய வாழ்க்கை முறையை முழுதாகக் கடைபிடிக்க முடியாமல் போனாலும் அதில் பாதியளவு செய்தாலே போதும். எடை சீராகும். உடலும் கட்டுக்கோப்பாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக