திங்கள், 27 ஜூலை, 2015

தேசிய சித்த மருத்துவ நிறுவனம்' பற்றி நண்பா் முகநுாலில் பகிர்ந்ததது

என் அப்பாவிற்கு வயது காரணம் காலில் ட்ரை ஸ்கின் பிரச்சனை வந்தது, குடும்ப மருத்துவரோ, பிண்டத் தைலம் போல ஆயுர்வேத, சித்தா எண்ணெய்கள் தடவிக்கொள்ளுங்கள், கடையில் விற்கும் மாய்ஸ்ரைச்சர்கள், க்ரீம்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.
சித்தா, ஆயுர்வேத மருந்துகள் எல்லாம் நவீன மருந்துகளுக்கு மாற்று என்று போனால், அவை படு பயங்கர விலைகளில் விற்கப்படுவது அப்பொழுதுதான் தெரிகிறது.
ஒரு காலத்தில் விலை மலிவாகக் கிடைக்கும் கோட்டக்கல் மருந்துகள் இன்றைக்கு ஆங்கில மருந்துகளை விட விலை அதிகமாகத்தான் கிடைக்கிறது. மாற்று மருத்துவங்களின் வளர்ச்சி மற்றும் மக்களிடையே அவை பெற்ற வரவேற்பு அல்லது நவீன மருந்துகளின் மீது ஏற்படுத்தப்பட்ட பயம் காரணமாக இருக்கலாம்.
நாற்பது வருடங்களாக அவ்வப்பொழுது வாங்கிக்கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு இந்த விலை ஏற்றங்கள் கொஞ்சம் அதிர்ச்சிதான்.
சரி என்று எங்கள் டாக்டர் சொன்னதைப் போல பிண்டத் தைலம், மஹா க்ருந்தகத் க்ருதம், போன்றவைகளை எல்லாம் பயன்படுத்தியும் பெரிய அளவில் அப்பாவுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை, மீண்டும் சென்றமுறை டாக்டரிடம் சென்றபோது கூறியதும். சித்தா / ஆயுர்வேத முறைகளில் மசாஜ் எடுக்க முடிந்தால் பாருங்கள் பலன் கிடைக்கும் என்று சொன்னார்.
பாரம்பரிய ஆயுர்வேத மசாஜ் விலைகள் கட்டுப்படியாகாது என்று நினைக்கும்போதுதான், தாம்பரம் மெப்ஸ் அருகில் இருக்கும் 'தேசிய சித்த மருத்துவ நிறுவனம்' பற்றி என் தங்கை மூலம் தெரிய வந்தது.
நேற்று பெற்றோரை அழைத்துக்கொண்டு காலை 8 மணிக்கெல்லாம் சென்றுவிட்டேன். பரந்து விரிந்த மரங்கள் சூழ்ந்த இடத்தில் அமைந்திருக்கிறது இந்த மருத்துவமனை. வாசலில் நுழைந்து 5 ரூபாய்க்கு கார் டோக்கன் வாங்கி, ரெஜிஸ்டர் செய்து சீட்டு வாங்கும் வரிசையில் நின்றுகொண்டேன். விரைவாக வேலை செய்யும் கவுன்டரில் நம் பெயர், வயது, விலாசம் போன்றவைகளைக் கேட்டு ஒரு சிறிய புத்தகத்தில் நிரப்பித் தருகிறார்கள். என்ன பிரச்சனை என்று சொன்னால் அறை எண் சொல்லி அங்கே சென்று மருத்துவரைப் பார்க்கச் சொல்கிறார்கள். இந்த பதிவு செய்யக் கட்டணம் ரூ.5/-.
அப்பாவைக் கூட்டிக்கொண்டு தோலுக்க்கான சிகிச்சை அளிக்கும் அறைக்குள் சென்றேன். ப வடிவில் சுமார் பத்து மருத்துவர்கள் ஒரு ஸ்டூலில் அமர்ந்திருக்கிறார்கள், எதிரே மற்றொரு ஸ்டூலில் நம்மை உட்காரச் சொல்கிறார்கள். பொறுமையாக என்ன பிரச்சனை என்று கேட்டு, மருந்து ஒவ்வாமை ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டு, மருந்துகள் எழுதிக் கொடுக்கிறார்கள். பின்னர் அதை அங்கே மேசை போட்டு உட்கார்ந்திருக்கும் ஒரு சீனியரிடம் கொடுத்து கையெழுத்து வாங்கிக்கொண்டு மருந்து வாங்கி வந்து மீண்டும் நாம் மருந்து எழுதிக் கொடுத்த மருத்துவரிடம் வந்தால் ஒவ்வொரு மருந்தையும் எப்படி பயன்படுத்தவேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறார்கள்.
சரி, என்று மருந்து வாங்கச் சென்றேன். 300 பேருக்கும் மேலாக வரிசை நீண்டிருந்தது. சுவர் ஓரமாக அனைவரும் அமர்ந்து செல்லும் வகையில் இருக்கை வசதி செய்யப்பட்டிருந்தது. சரி, கூட்டத்தைப் பார்த்தால் எப்படியும் 3 மணி நேரத்திற்கு மேல் ஆகும் என்று நினைக்கும்போது 30 நிமிடத்திற்குள்ளாகவே நான் கவுன்டர் அருகில் சென்றுவிட்டேன். மொத்தம் 10 கவுன்டர்கள் இரண்டு அதில் மூத்த குடிமக்களுக்கானது. நான் மருந்து வாங்கச் சென்ற கவுன்டரில் சீட்டைக் கொடுத்த உடன் ஒரு கவரில் பொடிகள், காலில் தேய்க்க எண்ணெய் போன்றவற்றைக் கொடுத்தனர். இந்த எண்ணெய் அல்லது கஷாயம் போன்றவைகள் வாங்க குறைந்தது இரண்டு அங்குல அளவிற்கான வாயுள்ள ஒரு டப்பாவை எடுத்துச் செல்வது நம் பொறுப்பு, அவை மருத்துவமனை வாயிலில் 7-10 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
அவைகளை வாங்கிக்கொண்டு மீண்டும் மருத்துவரைப் பார்த்து எப்படி உபயோகிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். பொறுமையாக விளக்கிச் சொன்னார்கள்.
நேற்று இரவிலிருந்து அப்பாவிற்குப் பயன்படுத்தியதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதும் ஆச்சரியம்.
--
சில விஷயங்கள்:
இது முழுவதும் இலவசமாக மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை, சுத்தம் சுகாதாரம் எல்லாமே பெரிய ஆங்கில கார்பொரெட் மருத்துவமனைக்கு நிகராக இருக்கிறது.
மருந்து கொடுக்கும் இடத்தில் பெரும்பாலும், எண்ணெய், கஷாயம் போன்றவை கொடுக்கப்பட்டாலும் ஒரு துளி கூட கீழே நீங்கள் பார்க்க முடியாத அளவிற்கு உடனுக்குடன் சுத்தம் செய்து பராமரிக்கப் படுகிறது.
ஒரு நயா பைசா கூட செக்யூரிட்டி முதல் சுத்தம் செய்பவர் வரை யாரும் கேட்பதில்லை. அமைதியாக கூட்டத்தைக் கட்டுப்படுத்தி, வரிசையை சிறப்பாக ஒழுங்கு படுத்தி, கேட்கும் கேள்விகளுக்கு பொறுமையாகப் பதில் சொல்லி ஆச்சரியப்படுத்துகிறார்கள்.
எனக்கு ஆன மொத்த செலவு, கார் பார்க்கிங் 5/-, பதிவு கட்டணம் 5/- மட்டுமே. ஐந்து நாட்களுக்கான மருந்தே வழங்கப்படுகிறது. செவ்வாய்க் கிழமை மதியம் 3மணிக்குச் சென்றால், மூத்த குடிமக்களுக்கு அதிக நாட்களுக்கு மருந்து வழங்கப்படுகிறது.
நான் சென்ற காலை 8 லிருந்து 11 மணிக்குள்ளாக எப்படியும் ஆயிரம் பேராவது, மருத்துவர்களைப் பார்த்து மருந்து வாங்கிச் சென்றிருப்பார்கள், அந்த அளவுக்கு வேகமாகவும், சிறப்பாகவும் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை கையாள்கிறார்கள்.
உள்ளே தங்கி சிகிச்சை பெறும் வசதிகளும் உண்டு, ஜெனரல் வார்ட் என்றால் 20/- ஒரு நாளைக்கும், ஏசி ரூம் என்றால் 350/- ஒரு நாளைக்கும் வாங்குவதாக அறிகிறேன். அட்டைக் கடி வைத்தியம் முதல் பல பாரம்பரிய சித்த வைத்திய முறைகள் இலவசமாக மக்களுக்கு அரசாங்கம் இந்த மருத்துவமனை மூலம் அளிக்கிறது. மிக அருமையாகப் பராமரித்து சிகிச்சை அளிக்கும் இந்த மருத்துவமனையின் மருத்துவர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.
விருப்பமுள்ளவர்கள் முயற்சித்துப் பயனடையவும்.
மேலும் விவரங்களுக்கு:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக