தாய்ப்பால் அதிகம் சுரக்க என்ன சாப்பிடலாம்?
தாய்ப்பாலைவிட நோய் எதிர்ப்புச் சக்தி கொண்ட சிறந்த உணவோ மருந்தோ குழந்தைகளுக்கு வேறு எதுவுமே இல்லை. இது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே என்றாலும், எல்லாத் தாய்மார்களாலும் குழந்தைக்குத் தேவையான அளவு தாய்பால் ஊட்ட முடிவதில்லை. அவர்கள் எந்த மாதிரியான உணவுகளைச் சாப்பிட்டால் தாய்ப்பால் போதிய அளவு சுரக்கும் என்பதைப் பற்றி தெளிவாக விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து மற்றும் தாய்ப்பால் ஆலோசகர் திவ்யா கிருஷ்ணமூர்த்தி.
”தாய் என்ன சாப்பிடுகிறாரோ அதுதான் குழந்தைக்குச் சத்தாக சென்று சேரும். அதனால், தாய்மார்கள் குழந்தைகளுக்காகவாவது தாங்கள் சாப்பிடும் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதிலும் குறிப்பாக, எடுத்துக் கொள்ளும் உணவை மொத்தமாக ஒரே சமயத்தில் சாப்பிட்டுவிடாமல், இரண்டு மணி நேர இடைவெளியில், நாள் ஒன்றுக்கு ஏழு முறை என்று உணவைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக் கொள்ளலாம். அது மட்டுமின்றித் தினமும் வேக வைத்த முட்டை, மீன் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். கோழி இறைச்சிக்குப் பதிலாக ஆட்டு இறைச்சியைச் சாப்பிடலாம். முள்ளங்கி, பீட்ரூட், தக்காளி போன்றவற்றை எடுத்துக் கொள்வதால் குழந்தைக்குச் சளிப் பிடிக்க வாய்ப்பு உள்ளது. எனவே இவற்றைத் தவிர்த்து கேரட், அவரைக்காய், சுரைக்காய், புடலங்காய் போன்ற நார்ச்சத்து மிகுந்த உணவுகளைத் தினமும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
கீரை வகைகளில் பொன்னாங்கண்ணிக் கீரையில் அதிக அளவில் புரதமும், மாவுச்சத்தும், வைட்டமின்களும் இருக்கின்றன. வாரம் இருமுறை இந்த கீரையை சேர்த்துக் கொள்ளலாம். இது பெண்களின் ஹார்மோன்களின் உற்பத்தியைப் பெருக்கித் தாய்ப்பாலை அதிகம் சுரக்க செய்யும். பேரீச்சம்பழம், திராட்சை, கேழ்வரகு, அவல், கோதுமை, சோயாபீன்ஸ் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொண்டால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.” என்கிறார் திவ்யா விளக்கமாக.
சென்னை மகப்பேறு மருத்துவர் ருக்மணியும் தாய்ப்பால் பற்றிச் சில ஆலோசனைகள் கூறினார். ”இன்றைய தாய்மார்கள் பலர் அழகு போய்விடும் என்கிற காரணத்திற்காகத் தாய்ப்பாலைத் தவிர்த்து, தங்கள் பிள்ளைகளுக்குப் பசும்பால் கொடுக்கிறார்கள். ஆறு மாத காலம்வரை குழந்தைகளின் சிறுநீரகம் உரிய வளர்ச்சியைப் பெறாத நிலையில் இருக்கும். அதனால், பசும்பாலில் காணப்படும் அதிகப்படியான புரதச் சத்து சில பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். தாய்ப்பாலில் குறைந்த அளவு கலோரிகளும் புரதச்சத்தும் உள்ளதால் குழந்தைகளின் வளர்ச்சி உரிய விகிதத்தில் இருக்கும்.
பெரும்பாலும் அசைவ உணவு வகைகளை மிகவும் குறைந்த காரத்துடன் அல்லது காரமே இல்லாமல் எடுத்துக் கொள்வதுதான் சிறந்தது. இல்லையென்றால் குழந்தைக்கு வயிற்றுபோக்கு ஏற்படுவதுடன் எரிச்சலும் உண்டாகும். பழ வகைகளைப் பொறுத்த வரையில் ஆப்பிள், கொய்யா போன்றவற்றை ஜூஸ் செய்து குடிக்காமல் அப்படியே சாப்பிட வேண்டும். ஏனென்றால், ஜூஸாக எடுத்துக் கொள்ளும் போது தாய்ப்பாலின் தன்மைத் திடமாக இல்லாமல் நீர்த்துவிடும். தாய்ப்பால் சிறந்த நோய் எதிர்ப்பு மருந்தாகவும் செயல்படக் கூடியது.” என்கிறார் ருக்மணி.
தாய்ப்பாலைத் தவிர்க்காதீங்க தாய்மார்களே!
நன்றி:- Dr. திவ்யா கிருஷ்ணமூர்த்தி.
நன்றி:- Dr. மகப்பேறு மருத்துவர் ருக்மணி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக