தொடர்ச்சியான இருமலுக்கு இயற்கை வைத்தியம்
கற்பூரவள்ளி இலையின்_சாற்றை சிறிதளவு சர்க்கரை கலந்து கொடுத்தால், குழந்தைகளின் கபம் கலந்த இருமல் நீங்கும். வறட்டு இருமலுக்கு திப்பிலியை வறுத்துப் பொடி செய்து, தேனில் குழைத்துக் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். இதை அனைவரும் செய்யலாம்.
வெங்காயம் 150 கிராம், சர்க்கரை 150 கிராம் எடுத்து வெங்காயத்தைப் பொடிப் பொடியாக நறுக்கி தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும். பிறகு அதை மெல்லிய துணியில் வடிகட்டவும். இந்த வெங்காயச் சாற்றில் சர்க்கரையைச் சேர்த்து பாகுபதமாகக் காய்ச்சி இறக்கவும். இந்த வெங்காயப் பாகை ஒரு வேளைக்கு ஒரு தேக்கரண்டி உட்கொண்டால் எப்பேர்ப்பட்ட இருமலும் சரியாகும்.
தொடர்ச்சியான இருமல்:
இருமல் தொடர்ந்து ஏற்பட்டு தொல்ல அளிக்கும்போது, பத்து கிராம் சிற்றரத்தையை உடைத்து ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளர் நீர்விட்டு பாதியாகச் சுண்டுமளவு கஷாயமாக்கிக்கொண்டு அதில் இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து, அத்துடன் ஒரு தேக்கரண்டி இஞ்சி சாற்றை கலந்து உள்ளுக்குக் கொடுத்து வந்தால் குணமாகும்.
சிற்றிருமல்:
நீங்கள் நன்றாகக் காய்ச்சிய பசும் பாலுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளுடன் சிறிது மிளகுத்தூளையும் சேர்த்துக் கலக்கி அருந்த இருமல் தணியும்.
இரைப்பு இருமலுக்கு:
இஞ்சிச் சாறு, ஈர வெங்காயச் சாறு, எலுமிச்சம்பழச்சாறு இவைகளை சம அளவு எடுத்து வேளைக்கு ஒரு தேக்கரண்டி அளவு மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் இரைப்பு இருமல் சாந்தியாகும். இருமல் அதிகமாயிருந்தால் ஒரு நாளைக்கு இரு வேளை சாப்பிடலாம்.
கோழை இருமல்:
நாய் துளசியைக் கொண்டு வந்து தினம் கொஞ்சம் சாப்பிட்டு வந்தால் கோழை இருமல் போன்ற குறைகளை அகற்றும். இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல போஷாக்கு பெறும்.
வறட்டு இருமல்:
வறட்டு இருமல் ஏற்பட்டிருந்தால், ஆழாக்களவு பசும்பாலுடன் அரைத் தேக்கரண்டியளவு மிளகை உடைத்துப் போட்டுக் கொதி வரும் வரைக் கொதிக்க வைத்து, இறக்கி வடிகட்டி, சிறிதளவு பனங்கற்கண்டையும் சேர்த்துக் கலக்கிப் படுக்கப் போகுமுன் குடித்துவிட வேண்டும். இது போல மூன்று நாள் சாப்பிட்டால் போதும், வறட்டு இருமல் குணமாகும்.
உடல் சூட்டினால் இருமல்:
உடல் சூட்டினால் ஏற்படும் இருமலைத்தான் இந்த மருத்துவம் கண்டிக்கும். மிளகுத் தூளையும் பனை வெல்லத்தையும் சேர்த்துப் பிசைந்து வைத்துக்கொண்டு ஒரு சுண்டைக்காய் அளவு உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால், இரண்டொரு நாட்களில் சூட்டு இருமல் சரியாகும்.
எந்த வகையான இருமலுக்கும்:
பொதுவாக எந்த வகையான இருமலையும் சீரகம் குணப்படுத்திவிடும். 10 கிராம் சீரகத்தைச் சுத்தம் பார்த்து அதை இலேசாக வறுத்து எடுத்து அம்மியில் வைத்துத் தூள் செய்து அது எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவு கற்கண்டைத் தூள் செய்து அத்துடன் கலந்து, ஒரு சீசாவில் வைத்துக்கொண்டு, காலை, மாலை அரை தேக்கரண்டியளவு சாப்பிட்டு வெந்நீர் குடிக்க ஐந்தே நாளில் இருமல் குணமாகும்.
கக்குவான் இருமலுக்கு:
கக்குவான் இருமலின்போது வெள்ளைப் பூண்டை உரித்து அதை நெய்யில் வதக்கி வைத்துக்கொண்டு சாதத்துடன் சுமார் இரண்டு கிராம் எடை வீதம் சேர்த்துக் கொடுத்து வந்தால் கக்குவான் இருமல் குணமாகும்.
ஜலதோஷம் காரணமாக இருமல்:
ஜலதோஷம் காரணமாக இருமல் ஏற்பட்டிருந்தால் ஒரு சுத்தமான சட்டியை அடுப்பில் வைத்து சட்டியைக் காயவிட்டு அதில் இரண்டு தேக்கரண்டியளவு மிளகைப் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். மிளகு வறுபட்டு சிவந்து வருகி, அதில் தீப்பொறி பறக்கும் சமயம் ஆழாக்குத் தண்ணீரை அதில் விட்டு மூடி நன்றாகக் கொதிக்க விட வேண்டும். கொதித்தபின் இறக்கி அதில் பாதியை மட்டும் ஒரு டம்ளரில் இறுத்துக்கொண்டு, அதில் தேவையான அளவு சர்க்கரைச் சேர்த்துக் காலையில் குடித்துவிட வேண்டும். மறுபகுதியை மிளகுடன் வைத்திருந்து மாலையில் குடித்துவிட வேண்டும். இருமல் குணமாகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக