செவ்வாய், 15 செப்டம்பர், 2015

இயற்கை களைக்கொல்லி தயார்...

ஒரே கல்லில் எக்கச்சக்கமான
மாங்காய் ங்க..!
இயற்கை களைக்கொல்லி தயார்...
***********************************
நீண்ட பரிசோதனைக்கு பிறகு வெற்றி ..
இது விவசாயிகளுக்கு வரபிரசாதம் என்றுகூட சொல்லலாம்..
ரசாயன களைக்கொல்லிகளை பயன்படுத்துவதால் மண் மலடாவதுடன்,
மனித உடலும் மலடாகிவிடுகிறது..
இதற்கு தீர்வுதான் என்ன என்று யோசித்தேன்..
முகநூலில் பல நண்பர்கள் மாட்டு கோமியம் தெளித்தால் களைச்செடி கருகி விடுகிறது என்று கூறினர்..
முயற்சித்தேன் களைமுளைவிடும் போது..
ஆனால் பலனலிக்கவில்லை..
சரி வெறும் கோமியம் மட்டும் தெளித்தால்
களை கருகாது என்று சிறிது கல் உப்பை சேர்த்தேன்..
களை கருகவில்லை..
எலுமிச்சபழத்தை சேர்த்தேன் பலனில்லை..
இதனுடன் வேப்பெண்ணெய் சேர்த்தேன் களைச்செடி கருகியது..
சரி என்று கடந்த மாதம் எனது வாழை காட்டில் தெளித்து பார்த்தேன்.
களைச்செடி கருகி வாழை கருகரு என்று வளர்ந்தது..
சரி இனி நாம் சின்ன டிராக்டரை விட்டு களைச்செடிகளை அழிக்க தேவை இல்லை என்று முடிவு செய்தேன்..
என்னிடம் இருப்பது இரண்டு நாட்டு மாடு..
பயிருக்கு உரத்தேவையை இந்த இரண்டு மாடுகளே பூர்த்தி செய்கிறது.
இது சராசரியாக தினமும் பத்து லிட்டர் கோமியம் கிடைப்பதே சிரமமாக இருந்தது
(12 மணி நேரத்தில்)
ஆனால் களைக்கொல்லிக்கு நாம் இந்த கோமியத்தை பயன்படுத்தினால் வாழைக்கு நீருடன் கலந்து விட பற்றாகுறை ஆகிவிடுமே என்று யோசித்தேன்..
தீவிரமாக யோசித்தேன்..
ஒரு யோசனை வந்தது..
நாம் ஏன் இந்த
வாழையின் பக்க கன்றுகளையும்,
வாழை பூவையும் மாட்டுக்கு போட்டால்
கோமியம் அதிகமாக கிடைக்குமே என்று ..
வீனாக போன பக்க கற்றுகளையும் வாழை பூவையும் மாட்டிற்கு போட்டேன் ..
கைமேல் பலன் கிடைத்தது.
சராசரியாக நாள் ஒன்றிற்கு இருபது லிட்டர் கோமியம் கிடைத்தது இரண்டு மாடுகளிடமிருந்து..
அப்படியே சேகரித்தேன் ஒரு மாதம்..
நானூறு லிட்டர் கோமியம் கிடைத்தது..
நிம்மதி பெருமூச்சு விட்டேன்..
செய்முறை விளக்கம்..
************************
நீர்கலக்காத மாட்டு கோமியம் ஒரு குடம் (பத்து லிட்டர்) ஒருமாத காலம் ஆகியிருந்தால் இன்னும் சிறப்பு..
முளைத்த களைச்செடியாக இருந்தால் ஒரு கிலோ கல் உப்பு ..
களைச்செடிகள் வளர்ந்திருந்தால் இரண்டு கிலோ கல் உப்பை பத்து லிட்டர் கோமியத்தில் போட்டு நன்றாக கலக்கவும்..
பிறகு ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து விடவும்..
அதனுடன் வேப்ப எண்ணை நூறு மில்லியை
இதனுடன் ஊற்றி கலக்கவும்..
பிறகு வடிகட்டி கைத்தெளிப்பானில் களைச்செடிகள் மீது தெளிக்கவும்..
(பயிருக்கு படாமல்)
அடுத்த இரண்டு நாட்களில் அனைத்து களைச்செடிகளும் கருகிவிடும் பார்த்தீனிய உட்பட கோரை, அறுகம்புல் தவிர..
இந்த களைக்கொல்லி பயிருக்கு எந்த தீங்கும்
தருவதில்லை,
காரணம் கோமியம் பயிர் வளர்ச்சிக்கு உகந்ததது..
வேப்ப எண்ணை தொடர்ந்து பயன்படுத்தினால் கோரை கிழங்கு கூட அழிந்து விடும்..
கல் உப்பு ஒரு கிலோ என்பதால் மண்ணை பாதிப்பது இல்லை..
இதை நீங்கள் செய்ய குறைந்த செலவே ஆகிறது..
அந்த காலத்தில் வேப்பமரத்தில் செய்த கலப்பையை கொண்டு நம் பாட்டன் பூட்டன் உழுதததால் கோரை விவசாய பூமியில் இல்லாமல் போனது..
பச்சை புரட்சி என்ற பெயரில் மரக்கலப்பை இரும்பு கலப்பை ஆன பின்பே கோரைக்கிழுங்கு நம் பூமிக்குள் நுழைந்து விவசாயிகளுக்கு பெரும் தலைவலியை தந்தது..
ஒரு டேங்க் இயற்கை களைக்கொல்லி தயாரிக்க ஆகும் செலவு,
கல் உப்பு ஒரு கிலோ 3 ரூபாய்
எலுமிச்சை பழம் 3 ரூபாய்
வேப்ப எண்ணை
100Ml 12 ரூபாய்
***********
ஆக மொத்தம் 18 ரூபாய்
கோமியம் இல்லாமல் பதினெட்டு ரூபாயில்
களைகலை அழித்து விடலாம்
மண் எந்த விதத்திலும் பாதிக்காமல்..
இதுவே ரசாயன களைக்கொல்லியை பயன்படுத்தினால் ஒரு டேங்க்கிற்கு நாற்பது ரூபாய் செலாவதுடன் மண் மலடாகி
அதில் வாழும் உயிரனங்களும் அழிந்து விடும்..
இன்று மஞ்சள் நடவு செய்துள்ளேன்.
இன்னும் இரண்டு நாட்களில் இந்த களைக்கொல்லியை தெளிக்க போகிறேன்..
இயற்கை களைக்கொல்லி இருக்கும்போது
செயற்கை களைக்கொல்லியை பயன்படுத்தி
சொந்த செலவுல சூனியம் ஏங்க வைக்கனும்..!!?

வீட்டில் தொந்தரவு தரும் எலி, பல்லி, கரப்பான் பூச்சி வராமல் தடுக்க சில வழிகள்!!!

வீட்டில் தொந்தரவு தரும் எலி, பல்லி, கரப்பான் பூச்சி வராமல் தடுக்க சில வழிகள்!!!
கண்டிப்பாக ஒவ்வொருவரும் தங்களின் வீட்டிலும் பல்லி, கரப்பான் பூச்சி, கொசு, எலி போன்றவைகளால் அதிக தொந்தரவுகளை சந்தித்திருப்போம். இவைகளை எப்போது தான் வீட்டில் இருந்து ஒழிப்போம் என்று பலரும் நினைப்பதோடு, கடைகளில் விற்கும் கண்ட பொருட்களையும் வாங்கிப் பயன்படுத்துவோம்.
அப்படி பணம் செலவழித்து கண்ட பொருட்களைப் பயன்படுத்தி அவைகளை விரட்டுவதற்கு பதிலாக, ஒருசில இயற்கை பொருட்களைக் கொண்டே அவற்றை எளிதில் விரட்டலாம்.
1 எலி
எலிக்கு புதினாவின் வாசனை பிடிக்காது. எனவே புதினாவை அவை வரும் இடங்களில் கசக்கிப் போட்டாலோ அல்லது புதினா எண்ணெயை பஞ்சில் நனைத்து எலி வரும் இடங்களில் வைத்தாலோ, அவை வருவதைத் தடுக்கலாம்.
2 கரப்பான் பூச்சி
கரப்பான் பூச்சியைக் கண்டு பயப்படுவோர் அதிகம். அப்படி பயமுறுத்தும் கரப்பான் பூச்சி வரும் இடங்களில் மிளகுத் தூள், வெங்காய பேஸ்ட் மற்றும் பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை சிறிது நீரில் கலந்து தெளித்தால், அவைகள் வருவதைத் தடுக்கலாம்.
3 ஈ
சில வீடுகளில் ஈ அதிகம் மொய்க்கும். அப்படி உங்கள் வீட்டில் ஈ அதிகம் இருந்தால், துளசி செடியை வீட்டு ஜன்னல்களில் வைத்து வளர்த்து வாருங்கள். இல்லாவிட்டால் லாவெண்டர், யூகலிப்டஸ் போன்ற எண்ணெய்களை தெளித்து விடுங்கள். இதனாலும் ஈக்கள் வருவதைக் கட்டுப்படுத்தலாம்.
வேறு சில வழிகள்
4 மூட்டைப்பூச்சி
மூட்டைப்பூச்சி உங்கள் வீட்டின் மெத்தையில் அதிகம் இருந்தால், வெங்காய சாற்றினை தெளித்து விட்டால், மூட்டைப்பூச்சிகள் அதன் வாசனையில் அழிந்துவிடும்
5 பல்லி
உங்கள் வீட்டு சுவற்றை பல்லிகள் ஆக்கிரமித்துள்ளதா? அப்படியெனில் வீட்டின் மூலைகளில் முட்டையின் ஓட்டினை வையுங்கள். இதனால் அதன் நாற்றத்தினால், பல்லிகள் போய்விடும்.
6 கொசுக்கள்
கொசுக்கள் வராமல் இருக்க வேப்பிலை உதவும். மேலும் பல கொசுவிரட்டிகளை விட வேப்பிலை மிகவும் சிறந்தது என்று ஆய்வுகளும் கூறுகின்றன. எனவே உங்கள் வீட்டில் கொசுக்கள் அதிகம் இருந்தால், காய்ந்த வேப்பிலையைக் கொண்டு தீ மூட்டுங்கள். இதனால் அப்போது வரும் புகையினால் கொசுக்கள் அழிந்துவிடும்.