சனி, 28 நவம்பர், 2015

வெந்நீர்....நெஞ்சு எரிச்சல், சதை குறையணுமா, உடம்பு வலிக்கிறதா, கால் பாதங்கள் வலி, தலை வலியா

‪#‎நெஞ்சு_எரிச்சல்_போகணுமா‬?
ஏதாவது எண்ணெய்ப் பலகாரம், சுவீட், அல்லது பூரி சாப்பிட்ட பிறகு நெஞ்சு கரித்துக் கொண்டிருக்கிறதா? உடனே எடுங்கள் ஒரு டம்ளர் வெந்நீரை…. மெதுவாகக் குடியுங்கள். கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போயே போச்சு!
‪#‎சதை_குறையணுமா‬?
வெந்நீர் குடித்தால் உங்கள் உடலில் போடும் அதிகப்படி சதை குறையவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்.
‪#‎காலையில்_சரியாக_மலம்‬ கழிக்க முடியவில்லை என்று ஃபீல் பண்ணுகிறீர்களா?
எடுங்கள் வெந்நீரை! குடியுங்கள் உடனே! இம்மீடியட் எஃபெக்ட் கிடைக்கும். (நிறையப் பேர், ”அட, காலையில் எங்க வீட்டில் காபி என்று பெயர் சொல்லி தினம் அதைத்தானே கொடுக்கிறார்கள்” என்று புலம்புவது கேட்கிறது!)
‪#‎உடம்பு_வலிக்கிறதா‬?
உடம்பு வலிக்கிற மாதிரி இருக்கிறதா? உடனே வெந்நீரில் கொஞ்சம் சுக்குத்தூள், பனங்கற்கண்டு போட்டு குடியுங்கள். இதன் மூலம் பித்தத்தினால் வரும் வாய்க்கசப்பு மறைந்து விடும். மேலும், உடல் வலிக்கு, நன்றாக வெந்நீரில் குளித்துவிட்டு, இந்த சுக்கு வெந்நீரையும் குடித்துவிட்டுப் படுத்தால், நன்றாகத் தூக்கம் வருவதோடு, வலியும் பறந்துவிடும்.
‪#‎கால்_பாதங்கள்_வலிக்கிறதா‬?
எங்காவது அலைந்துவிட்டு வந்து கால் பாதங்கள் வலிக்கிறது என்றால், அதற்கும் நமது வெந்நீர்தான் ஆபத்பாந்தவன். பெரிய பிளாஸ்டிக் டப்பில் கால் சூடு பொறுக்குமளவுக்கு வெந்நீர் ஊற்றி அதில் உப்புக்கல்லைப் போட்டு, அதில் கொஞ்ச நேரம் பாதத்தை வைத்து எடுங்கள். காலில் அழுக்கு இருப்பது போல் தோன்றினால், வெந்நீரில் கொஞ்சம் டெட்டால் ஊற்றி அதில் பாதத்தை வைத்தால், கால் வலி மறைவதோடு, பாதமும் சுத்தமாகிவிடும்.
‪#‎மூக்கு_அடைப்பா‬?
மூக்கு அடைப்பா? நம்ம வெந்நீர்தான் டாக்டர்! வெந்நீரில் விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சனம் போட்டு அதில் முகத்தைக் காண்பித்தால், மூக்கடைப்பு போயிந்தி! வீட்டில் வேலைக்கு ஆட்கள் இல்லாமல் தாங்களே பாத்திரம் தேய்த்து, துணி துவைக்கும் பெண்கள், வாரத்திற்கு ஒரு முறையேனும் உங்கள் கைகளை வெந்நீரில் கொஞ்ச நேரம் வைத்திருங்கள். இதன் மூலம் நக இடுக்கில் இருக்கும் அழுக்குகள் போய், உங்கள் கைகள் ஆரோக்கியமாக இருக்கும்.
‪#‎வெயிலில்‬ அலைந்து தாகம் எடுக்கும் போதுவெயிலில் அலைந்து விட்டு வந்து உடனே சில்லென்று ஐஸ்வாட்டர் அருந்துவதைவிட, சற்றே வெதுவெதுப்பான வெந்நீர் அருந்துவது, தாகம் தீர்க்கும் நல்ல வழி. ஈஸினோபீலியா, ஆஸ்துமா போன்ற உபாதைகள் இருப்போர், உங்களுக்கு தாகம் எடுக்கும் போதெல்லாம் கண்டிப்பாக வெதுவெதுப்பான வெந்நீர் குடியுங்கள்.
திருமணம் மற்றும் பார்ட்டிகளில் நாம் நன்றாக சாப்பிட்டு விட்டு குளிர் பானங்கள் குடிக்காமல் ஒரு கிளாஸ் வெந்நீர் குடியுங்கள் அது உங்களுக்கு உடம்புக்கு நல்ல பலனை தரும்.
‪#‎ஜலதோஷம்‬ பிடித்தவர்களுக்கு
அதுபோலவே, ஜலதோஷம் பிடித்தவர்களும் வெந்நீர் குடித்தால், அது அந்த நேரத்துக்கு நல்ல இதமாக இருப்பதோடு சீக்கிரம் குணமாகும். இதையெல்லாம் தவிர, வீட்டில் நெய், எண்ணெய் பாட்டில் இருந்த பாத்திரங்களைக் கழுவும்போது கொஞ்சம் வெந்நீரை ஊற்றி ஊற வைத்து, அப்புறம் கழுவினால் பிசுக்கே இல்லாமல் பளிச்சென்று சுத்தமாகும்.
‪#‎தரையை_துடைக்கும்‬ போது
அதுபோலவே தரை துடைக்கும் போது, குறிப்பாக குழந்தைகள், நோயாளிகள் இருக்கும் வீட்டின் தரைகளை வெந்நீர் உபயோகப்படுத்தி துடையுங்கள். கிருமி இல்லாத சுத்தமான தரை உங்களுடையதாகும்!
‪#‎திடீரென்று_கடுமையான_தலை_வலியா‬?
தலைவலியை உணர்ந்தவுடன் 200 மி.லி அளவு வெந்நீர் அருந்துங்கள். சில நேரங்களில் அஜீரணம் அல்லது குடலில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் கூட தலை வலி ஏற்பட வாய்ப்புண்டு. எனவே இளஞ்சூட்டில் வெந்நீர் குடித்தால், உடனடியாக ஜீரணத்தை தூண்டி தலைவலி நீங்கும். அல்லது சூடான காபியை குடியுங்கள். தலைவலிக்கு இதமான மருந்தாக காபி அமையும்.
‪#‎சுறுசுறுப்புக்கு_சுக்கு_வெந்நீர்‬’
தமிழகத்தைப் பொருத்தவரை நகர்ப்புறங்களிலும், கிராமங்களிலும் பெரும்பாலான வீடுகளில் வாரம் ஒருமுறை சுக்கு வெந்நீர் தயாரித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டில் உள்ள அனைவருக்கும் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.சென்னை போன்ற பெருநகரங்களிலும், மைக்ரோ ஃபேமிலி (micro family) எனப்படும் 3 அல்லது 4 பேரைக் கொண்ட தனிக்குடித்தனங்களிலும் சுக்கு வெந்நீர் என்பது கானல் நீர் எனலாம். விருந்து, விழாக்கள், அலுவலகப் பார்ட்டி என்று பல இடங்களிலும், பல்வேறு விதமான உணவு வகைகளைச் சாப்பிட்டு அஜீரணத்திற்கு உள்ளாவோர் இந்த சுக்கு வெந்நீரை 200 மி.லி அளவுக்கு வாரம் ஒரு முறை அருந்தி வந்தால், உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேராமல் தவிர்ப்பதோடு புத்துணர்ச்சியையும், சுறுசுறுப்பையும் தரும்.
சுக்கு வெந்நீரானது கிராமங்களில் சிறு ஹோட்டல் போன்ற கடைகளில் கிடைக்கும். அல்லது வீட்டிலும் நாமே தயாரித்து பருகலாம்.
சிறிதளவு சுக்கினை சிறுசி

வெள்ளி, 27 நவம்பர், 2015

தினமும் உணவில் சிறிது நெய் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

தினமும் உணவில் சிறிது நெய் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!
உடல் ஆரோக்கியம் மீது அதிக அக்கறை கொண்டவர்கள், உண்ணும் உணவில் எண்ணெய், நெய் போன்றவற்றை சேர்க்கமாட்டார்கள். அப்படி சேர்க்காமல் இருந்தால், உடலுக்கு வேண்டிய ஒருசில முக்கிய சத்துக்கள் கிடைக்காமல் போய்விடும். அதிலும் நெய் சேர்க்காமல் இருப்பது மிகவும் தவறு. ஏனெனில் நெய்யில் ஊட்டச்சத்துக்களானது வளமாக நிறைந்திருப்பதால், அதனை அன்றாட உணவில் சிறிது சேர்த்து வருவதன் மூலம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்.
ஞாபக மறதியைத் தடுக்கும் :-
நெய்யை அன்றாடம் சிறிது சேர்த்து வருவது நரம்பு மற்றும் மூளைக்கு நல்லது . ஏனெனில் மூளையில் ஒமேகா-6 ஃபேட்டி ஆசிட் மற்றும ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் வளமாக நிறைந்துள்ளது. இந்த சத்துக்களின் அளவு உடலில் குறையும் போது, ஞாபக மறதி வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே தினமும் இதனை சிறிது சேர்த்து வந்தால், மூளையின் செயல்பாடு சீராக இருக்கும்.
புற்றுநோயைத் தடுக்கும்:-
நெய்யில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. மேலும் இதனை சூடேற்றும் போது ப்ரீ ராடிக்கல்களை குறைவாக உற்பத்தி செய்வதால், புற்றுநோய் வரும் அபாயம் குறையும். நெய்யில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருப்பதால், அவை நல்ல பாதுகாப்பு தரும்.
செரிமானம் மேம்படும்:-
நெய் செரிமான அமிலத்தை சுரக்க உதவிபுரியும். மேலும் இந்திய உணவுகளில் எளிதில் செரிமானமாக உணவுகளில் நெய் சேர்க்கப்படுவதற்கு முக்கிய காரணமும் இது தான் என்றும் சொல்லலாம். எனவே செரிமான சீராக நடைபெற தினமும் உணவில் சிறிது நெய் சேர்த்துக் கொள்ளுங்கள்.,
கொழுப்புக்களை கரைக்கும் :-
உங்கள் உடலில் ஆங்காங்கு கொழுப்புக்கள் தேங்கியிருந்தால், தினமும் உணவில் நெய் சேர்த்து வாருங்கள். ஏனெனில் நெய்யில் உள்ள அமினோ அமிலங்கள், கொழுப்புக்களை கரைப்பதோடு, கொழுப்பு செல்களை சுருங்கவும் செய்யும்
மூட்டு வலிகள் :-
மூட்டு வலியால் அவஸ்தைப்படுபவர்கள், தினமும் டயட்டில் சிறிது நெய் சேர்த்து வந்தால், மூட்டு வலி வருவது குறையும்.
நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்கும்:-
நெய்யில் உள்ள ஆன்டி-வைரல் மற்றும் பூஞ்சையெதிர்ப்பு பொருள், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும்.

வியாழன், 26 நவம்பர், 2015

ரசாயனங்கள் இல்லாத உணவுகள்.. கற்றுத் தரும் "கியூபா"...

"கியூபா"(CUBA) நாடு ஒரு வகையில் உலகத்துக்கே முன்னோடியாக இருக்கிறது.
அது எதில்....?
ரசாயனங்கள் இல்லாத உணவுகள்..
கற்றுத் தரும் "கியூபா"...
கியூபா... இது அமெரிக்காவின் அருகில் இருக்கும் சின்னஞ்சிறிய நாடு என்பதும், கம்யூனிச ஆட்சியின் கீழ் இருக்கிறது என்பதும் நமக்குத் தெரியும்.
கியூபா தான் ரசாயன உரமில்லாத இயற்கை வழி வேளாண்மையின் முன்னோடி நாடு என்று தெரியுமா....?
‘உலகின் சர்க்கரைக் கிண்ணம்’ என்பார்கள் கியூபாவை...!
கரும்பை மட்டுமே முக்கியப் பயிராகக் கொண்ட கியூபா, 1959ம் ஆண்டு ஃபிடல் காஸ்ட்ரோ தலைமையில் நிகழ்ந்த புரட்சியின் மூலம் கம்யூனிச நாடாக மாறியது.
அருகிலிருக்கும் அமெரிக்காவிற்கு, மிகச்சிறிய நாடான கியூபாவின் மாற்றம் பிடிக்கவில்லை. அமெரிக்கக் கண்டத்தில் ஒரு கம்யூனிச நாடு செழித்து வளர்ந்தால், அது அருகில் இருக்கும் மற்ற நாடுகளுக்கும் பரவும் என்பது அமெரிக்காவின் பயம்.
அதனால் உலக நாடுகள் பலவற்றோடு இணைந்து, கியூபா மீது பொருளாதாரத் தடையை விதித்தது அமெரிக்கா.
கரும்பு மட்டுமே விளையும் கியூபாவுக்கு உணவு உட்பட எல்லா அத்தியாவசியப் பொருட்களும் பிற நாடுகளிடமிருந்து தான் வர வேண்டும்.
இந்நிலையில் அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடை கடும் சிக்கலை கியூபாவிற்கு ஏற்படுத்தியது.
அப்போது சோவியத் ரஷ்யா கியூபாவிற்கு உதவ முன் வந்தது. கியூபாவின் சர்க்கரையைப் பெற்றுக் கொண்டு, கியூபாவிற்குத் தேவையான உணவுப் பொருட்களையும், இதர அத்தியாவசியப் பொருட்களையும் ரஷ்யா அனுப்பி வைத்தது.
அன்றைய கியூபாவின் உணவுத் தேவையில் அறுபது சதவீதம் ரஷ்யாவில் இருந்தே வந்தன. கரும்பு உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கிய கியூபா, அதற்குத் தேவையான ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள், டீசல், வேளாண் எந்திரங்கள்... இப்படி அனைத்தையும் ரஷ்யாவிடமிருந்தே பெற்றது.
நவீன வேளாண் முறையில் உணவு உற்பத்தியைத்துவங்கிய கியூபாவில் ஓர் ஆண்டிற்கு 13 லட்சம் டன் ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லிகளும் பயன்படுத்தப்பட்டன. சுமார் 90,000 டிராக்டர்கள் விவசாயத்திற்குப் பயன்படுத்தப்பட்டன. ஒற்றைப் பயிர் சாகுபடியில் கியூபா முன்னிலையில்இருந்தாலும் கூட, பல்வேறு சூழலியல் பிரச்னைகளை எதிர்கொண்டது.
ரசாயன வேளாண்மையின் பல்வேறு தீங்குகளையும் கியூபா சந்தித்தது. நிலங்கள் படிப்படியாக உற்பத்தித்திறனை இழந்தன. தொழிற்சாலைகளைப் போல விவசாயம் நகர் மயமானதில் கிராமம் சார்ந்த பல தொழில்கள் நசிவைச் சந்தித்தன.
விளைவு...
கிராம மக்கள் நம் நாட்டைப் போலவே நகரங்களை நோக்கிப் பயணித்தார்கள். 1956ம் ஆண்டின் புள்ளி விவரப்படி கியூபாவில் கிராமங்களில் வசித்தவர்கள் அதன் மொத்த மக்கள் தொகையில் 56%. ஆனால் 1989ம் ஆண்டு புள்ளிவிவரப்படி கிராமங்களில் வசிப்போர் எண்ணிக்கை 28 சதவீதமாகக் குறைந்தது.
இந்தச் சூழலில் தான் சோவியத் ரஷ்யா சிதறுண்டது. கியூபா தன் தேவைகளுக்காக சார்ந்திருந்த ரஷ்யாவின் உதவிகள் கிடைக்கவில்லை. நவீன விவசாயத்தை சுய சார்போடு செய்ய முடியாத சூழலில் டீசல் உட்பட பல பொருட்களின் தேவை இருந்தது.
தயாரான சர்க்கரையை ஏற்றுமதி செய்ய முடியவில்லை. உணவுப்பொருட்கள், ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகள் எதையும் வெளிநாடுகளிலிருந்து வாங்க முடியாத சூழலில், ஃபிடல் காஸ்ட்ரோ ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவை எடுத்தார்.
அதன் படி, கரும்பு மட்டுமே விளைவிப்பது என்ற ஒற்றைப் பயிர் சாகுபடி முறையைக் கை விட்டது கியூபா. தங்களுக்குத் தேவையான எல்லா உணவுப் பொருட்களையும் தங்கள் மண்ணிலேயே உற்பத்தி செய்யும் முடிவிற்கு வந்தார் ஃபிடல்.
நாடு முழுவதும் நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. உள்நாட்டிலேயே கிடைக்கும் பொருட்களைக் கொண்டு உயிர் உரங்கள் இயற்கை வழி வேளாண் முறையில் தயாரிக்கப்பட்டன. குடும்பத் தோட்டங்கள், நகர்ப்புற விவசாயம் என அனைத்து வகைகளிலும் தற்சார்பு வேளாண்மைக்குத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன.
கியூப மக்களின் முக்கியமான உணவுகளில் ஒன்று, அரிசி. இயற்கை வழி வேளாண்மை துவங்கப்பட்ட ஒரே ஆண்டில், கியூபாவின் ஒட்டு மொத்த தேவையில் ஐம்பது சதவீத நெல் அங்கேயே விளைந்து செழித்தது. கிழங்கு உற்பத்தியில் தென்அமெரிக்காவில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது கியூபா.
கியூபாவின் மொத்த மக்கள் தொகையில் 95% கல்வி கற்றவர்கள். அவர்கள் செய்த விவசாயத்தில் தான் கியூபாவின் உணவுத்தேவை நிறைவேறத் துவங்கியது. கிராமப்புறங்களில் மட்டுமல்லாமல், நகர்ப்புற காலியிடங்கள் எல்லாம் விவசாயத்திற்குப் பயன்படுத்தப்பட்டன.
பல்வேறு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கூட்டுறவு சங்கங்களுக்குச் சொந்தமான காலி இடங்கள் எல்லாம் விவசாய நிலங்களாக மாறின.
1.1 கோடி மக்கள் தொகையைக் கொண்ட கியூபாவின் குடிமக்கள் அனைவரும், தங்கள் உணவுத்தேவையைப் பூர்த்தி செய்வதற்கான சுய போராட்டத்தை தாங்களே நடத்தினார்கள். வீடுகளில் இருக்கும் குறைந்த இடங்களில் காய்கறி பயிரிட்டார்கள். மாடித்தோட்டம் மூலம் தங்கள் தேவையையும் நிறைவேற்றி, எஞ்சியவற்றை விற்கத் துவங்கினார்கள்.
இயற்கை வழி வேளாண்மையில் நிலத்தையும், சூரிய ஒளியையும் வீணாக்காமல் பயன்படுத்துவதன் அவசியத்தை விளக்குவார்கள். ‘‘ஒரு சதுர அடி இலைப் பரப்பின் மீது எட்டு மணி நேரம் தொடர்ந்து சூரிய ஒளி விழுந்தால் மூன்று கிராம் குளுகோஸ் ஒளிச்சேர்க்கையின் மூலம் தயாரிக்கப்படுகிறது’’ என்று சொல்வார் மராட்டிய கணிதப் பேராசான் ஸ்ரீபாத் தபோல்கர்.
அதே புரிதலோடு கியூபா சூரிய ஒளியை அறுவடை செய்தது. உணவிற்காக பிற நாடுகளை நம்பி இருக்க வேண்டிய அவசியத்தை உடைத்தெறிந்தது.
தன் உணவுத் தேவையை தானே பூர்த்தி செய்து கொண்டது. 2000ம் ஆண்டில் நகர்ப்புற வேளாண்மையில் மட்டும் கியூபாவிற்குக் கிடைத்த உணவுப் பொருட்கள் 12 லட்சம் டன். விவசாய நிலங்களிலிருந்தும், கிராமப்புறங்களில் இருந்தும் கிடைத்த உணவுப்பொருட்களின் கணக்கு தனி.
இது எவ்வளவு பெரிய வேறுபாடு...?
தங்களுடைய உணவுத் தேவைக்காகவும், விவசாயத் தேவைகளுக்காகவும் பிற நாடுகளைச் சார்ந்திருந்த கியூப மக்கள், சில ஆண்டுகளில் தற்சார்பு உணவு உற்பத்தியைச் சாத்தியமாக்கினார்கள்.
விவசாயத்திற்காக நாட்டிற்கு வெளியிலிருந்து எந்த ரசாயனமோ, பூச்சிக்கொல்லியோ அவர்களுக்குத் தேவைப்படவில்லை. ‘சூழலியலுக்கு உங்கள் கடனைச் செலுத்துங்கள். மக்களை அல்ல, பசியை எதிர்த்துப் போராடுங்கள்’ என ஃபிடல் காஸ்ட்ரோ விடுத்த அழைப்பை ஏற்று கியூப மக்கள் தங்கள் தேவைகளை சுய முயற்சி மூலம் பூர்த்தி செய்து கொண்டார்கள்.
உலக சுகாதார நிறுவனம் (WHO) ஒரு தனிமனிதனின் காய்கறித் தேவையை அறிவிக்கிறது. அதன் படி, ஒரு மனிதனுக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 300 கிராம் காய்கறி தேவை.
இந்த உலகக் கணக்கை கியூப மக்கள் மிஞ்சி விட்டார்கள். அவர்களுடைய அன்றாட காய்கறிப் பயன்பாடு, ஒரு தனிநபருக்கு 469 கிராம்.
நிலமும், விவசாயத்திற்கான சூழலும் குறைவாக இருந்த கியூபா மாதிரியான குட்டி நாடு ரசாயனங்களைப் பயன்படுத்துவதில் இருந்து விலகி, தங்கள் மண்ணையும் விவசாயத்தையும் உணவுகளையும் மக்களையும் காத்துக் கொண்டிருக்கிறது.
விவசாயத்தையே முக்கியத் தொழிலாகக் கொண்ட கோடிக்கணக்கான ஏக்கர் தரிசு
நிலங்களும், ஏராளமான வசதிகளையும் கொண்ட நம் நாடு, உணவில் ரசாயனம் இருப்பதை வெறுமனே ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பது வேடிக்கையானது.
சமீபத்தில் தமிழகக் காய்கறிகளில் பூச்சிக்கொல்லி மருந்து அதிகம் இருப்பதாகக் கூறிய கேரளா, தன் காய்கறித் தேவைக்காக மாற்று வழிகளைத் தேடத் துவங்கியுள்ளது.
மாடித்தோட்டம், இயற்கை வழி வேளாண்முறைகள் மூலமாக காய்கறி உற்பத்தியைத் துவங்குவதற்கான தீவிர வழிகளை ஆய்வு செய்து வருகிறது கேரளா.
நாமோ, நல்ல விளைச்சல் உருவாகும் என்று நம்பி ரசாயன மருந்துகளையும், பூச்சிக்கொல்லிகளையும் உணவுப் யிர்களின் மீது பயன்படுத்தி விவசாயத்தை ஒரு ரசாயன தொழிற்சாலையாக மாற்றிக் கொண்டிருக்கிறோம்.
உலகமெல்லாம் ரசாயனங்களின் மீது ஏற்பட்டிருக்கிற அச்சத்தை நாமும் பயன்படுத்திக் கொண்டு, ரசாயனங்களிலிருந்து விடுபடுவதற்கான வழிகளைத் தேடுவது காலத்தின் கட்டாயம்.
நம் உணவுப் பொருட்களை விளைவிக்கும் போது அதன் உட்செல்லுகிற ரசாயனங்கள் ஒரு புறம். அதை அறுவடை செய்த பிறகும் நாம் சும்மா விடுவதில்லை.
உணவுப் பொருட்களை அழகுபடுத்துவதற்கும், கெடாமல் பாதுகாப்பதற்கும் பல வகையான ரசாயனங்களைப் பயன்படுத்துகிறோம்.
ஒவ்வொருவரும் தங்களுக்கு உள்ள சிறிய நிலத்தில்.... மாடியில்.... இயற்கை முறை விவசாயத்தை பயன் படுத்தி உங்களுக்கு தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்துகொள்ள ஆர்வத்துடன் கற்றுக்கொண்டு, உற்பத்தி செய்து, அதனை உண்டு பயன் பெறுங்கள். ரசாயனம் என்ற விஷம் கலவாத ஆரோக்யமான உடலை பெற்று நோயின்றி வாழுங்கள்.
இதை மக்களுக்கு புரியவைப்பதே எமது நோக்கம். இந்த தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்…

செவ்வாய், 24 நவம்பர், 2015

குழந்தையின் மூச்சுக் குழாய் அல்லது உணவுக் குழாயில் பொருட்கள் அடைத்துக்கொண்டால்



குழந்தையின் மூச்சுக் குழாய் அல்லது உணவுக் குழாயில் பொருட்கள் அடைத்துக்கொண்டால் பாதிக்கப்பட்ட குழந்தையை முன்பக்கம் குனியவைத்து ஒரு கையால் தாங்கியபடி, தோள்பட்டை எலும்புகளுக்கு இடையில் உள்ளங்கையின் அடிப்பாகத்தால் ஓங்கித் தட்ட வேண்டும். இப்படிச் சில முறைகள் தட்டினால் தொண்டையில் சிக்கியுள்ள பொருள் வாய் வழியாக வெளியேவந்துவிடும்!
## பயனுள்ள தகவல்.... பகிரலாமே!

உடல் நலம் பெற ஓர் அற்புத பானம்

உடல் நலம் பெற ஓர் அற்புத பானம்

செய்முறை மிகவும் எளிது..
தேவையான பொருட்கள்: காரட் - 1, பீட்ரூட்-1, ஆப்பிள் – 1, தோல் நீக்கிய இஞ்சித்துண்டு -1.
செய்முறை: தோல் நீக்கிய இஞ்சித்துண்டு,மற்றும் காரட், பீட்ரூட், ஆப்பிள் ஆகியவற்றை நன்றாகக் கழுவி, தோலோடு துண்டுகளாக நறுக்கி , ஜூஸரில் இட்டு சாறு பிழிந்து அருந்தவும்.
உத்தரவதமாகக் கிட்டும் நன்மைகள்:
* புற்று நோய் செல்கள் வளருவதைத் தடுக்கிறது
* கல்லீரல், கணையம், சிறு நீரகங்கள் தொடர்பான வியாதிகள் வருவதைத் தடுக்கிறது
* வயிற்றுப் புண்ணை குணமாக்குகிறது
* நுரையீரலைப் பலப்படுத்துகிறது
* இதயத் தாக்குதல் மற்றும் உயர் ரத்த அழுத்தம் வருவதைத் தடுக்கிறது
* நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்குகிறது
* பார்வைத் திறனை அதிகரிக்கிறது. களைப்படைந்த கண்களுக்கும் , உலர் கண்களுக்கும் நன்மை பயக்கிறது.
* தசை வலி மற்றும் உடல் வலிக்கு நிவாரணம் தருகிறது
* உடலில் சேரும் நச்சுத் தன்மையை முறிக்கிறது.
* சருமத்திற்கு பளபளப்பினைக் கூட்டுகிறது
* அஜீரணம், தொண்டைப் புண் ஆகியவற்றால் ஏற்படும் சுவாச துர்நாற்றத்தை நிவர்த்தி செய்கிறது
* பக்க விளைவுகள் ஏதுமில்லை
* சத்து மிகுந்தது - எளிதில் உடலில் சேரக் கூடியது
* எடைக் குறைப்பிற்கு உதவுகிறது
* இரண்டு வார கால உபயோகத்திலேயே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது
அருந்தும் விதம்
- காலையில் வெறும் வயிறில் அருந்தவும்.
- சாறு பிழிந்த உடனேயே அருந்துவது மிகுந்த நன்மை தரும்
- அருந்திய பின் ஒரு மணி நேரம் கழித்து காலை உணவு உண்ணலாம்
- அதிகப் பலன் பெற காலை ஒரு முறை, மாலை 5 மணிக்கு முன்பு ஒரு முறை என இரண்டு வேளைகள் அருந்தலாம்
குறைந்த செலவில் நிறைந்த பலன் களை வாரி வழங்கும் அற்புத பானத்தை நீங்கள் உடனே அருந்தத் துவங்குங்கள் -
##########################

ஞாயிறு, 22 நவம்பர், 2015

தாய்ப்பால் அதிகம் சுரக்க என்ன சாப்பிடலாம்?

தாய்ப்பால் அதிகம் சுரக்க என்ன சாப்பிடலாம்?
தாய்ப்பாலைவிட நோய் எதிர்ப்புச் சக்தி கொண்ட சிறந்த உணவோ மருந்தோ குழந்தைகளுக்கு வேறு எதுவுமே இல்லை. இது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே என்றாலும், எல்லாத் தாய்மார்களாலும் குழந்தைக்குத் தேவையான அளவு தாய்பால் ஊட்ட முடிவதில்லை. அவர்கள் எந்த மாதிரியான உணவுகளைச் சாப்பிட்டால் தாய்ப்பால் போதிய அளவு சுரக்கும் என்பதைப் பற்றி தெளிவாக விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து மற்றும் தாய்ப்பால் ஆலோசகர் திவ்யா கிருஷ்ணமூர்த்தி.
”தாய் என்ன சாப்பிடுகிறாரோ அதுதான் குழந்தைக்குச் சத்தாக சென்று சேரும். அதனால், தாய்மார்கள் குழந்தைகளுக்காகவாவது தாங்கள் சாப்பிடும் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதிலும் குறிப்பாக, எடுத்துக் கொள்ளும் உணவை மொத்தமாக ஒரே சமயத்தில் சாப்பிட்டுவிடாமல், இரண்டு மணி நேர இடைவெளியில், நாள் ஒன்றுக்கு ஏழு முறை என்று உணவைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக் கொள்ளலாம். அது மட்டுமின்றித் தினமும் வேக வைத்த முட்டை, மீன் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். கோழி இறைச்சிக்குப் பதிலாக ஆட்டு இறைச்சியைச் சாப்பிடலாம். முள்ளங்கி, பீட்ரூட், தக்காளி போன்றவற்றை எடுத்துக் கொள்வதால் குழந்தைக்குச் சளிப் பிடிக்க வாய்ப்பு உள்ளது. எனவே இவற்றைத் தவிர்த்து கேரட், அவரைக்காய், சுரைக்காய், புடலங்காய் போன்ற நார்ச்சத்து மிகுந்த உணவுகளைத் தினமும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
கீரை வகைகளில் பொன்னாங்கண்ணிக் கீரையில் அதிக அளவில் புரதமும், மாவுச்சத்தும், வைட்டமின்களும் இருக்கின்றன. வாரம் இருமுறை இந்த கீரையை சேர்த்துக் கொள்ளலாம். இது பெண்களின் ஹார்மோன்களின் உற்பத்தியைப் பெருக்கித் தாய்ப்பாலை அதிகம் சுரக்க செய்யும். பேரீச்சம்பழம், திராட்சை, கேழ்வரகு, அவல், கோதுமை, சோயாபீன்ஸ் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொண்டால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.” என்கிறார் திவ்யா விளக்கமாக.
சென்னை மகப்பேறு மருத்துவர் ருக்மணியும் தாய்ப்பால் பற்றிச் சில ஆலோசனைகள் கூறினார். ”இன்றைய தாய்மார்கள் பலர் அழகு போய்விடும் என்கிற காரணத்திற்காகத் தாய்ப்பாலைத் தவிர்த்து, தங்கள் பிள்ளைகளுக்குப் பசும்பால் கொடுக்கிறார்கள். ஆறு மாத காலம்வரை குழந்தைகளின் சிறுநீரகம் உரிய வளர்ச்சியைப் பெறாத நிலையில் இருக்கும். அதனால், பசும்பாலில் காணப்படும் அதிகப்படியான புரதச் சத்து சில பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். தாய்ப்பாலில் குறைந்த அளவு கலோரிகளும் புரதச்சத்தும் உள்ளதால் குழந்தைகளின் வளர்ச்சி உரிய விகிதத்தில் இருக்கும்.
பெரும்பாலும் அசைவ உணவு வகைகளை மிகவும் குறைந்த காரத்துடன் அல்லது காரமே இல்லாமல் எடுத்துக் கொள்வதுதான் சிறந்தது. இல்லையென்றால் குழந்தைக்கு வயிற்றுபோக்கு ஏற்படுவதுடன் எரிச்சலும் உண்டாகும். பழ வகைகளைப் பொறுத்த வரையில் ஆப்பிள், கொய்யா போன்றவற்றை ஜூஸ் செய்து குடிக்காமல் அப்படியே சாப்பிட வேண்டும். ஏனென்றால், ஜூஸாக எடுத்துக் கொள்ளும் போது தாய்ப்பாலின் தன்மைத் திடமாக இல்லாமல் நீர்த்துவிடும். தாய்ப்பால் சிறந்த நோய் எதிர்ப்பு மருந்தாகவும் செயல்படக் கூடியது.” என்கிறார் ருக்மணி.
தாய்ப்பாலைத் தவிர்க்காதீங்க தாய்மார்களே!
நன்றி:- Dr. திவ்யா கிருஷ்ணமூர்த்தி.
நன்றி:- Dr. மகப்பேறு மருத்துவர் ருக்மணி.

சனி, 21 நவம்பர், 2015

பொடுகுத் தொல்லை போயே போச்சு!

பொடுகுத் தொல்லை போயே போச்சு!
இப்போதெல்லாம் வெளிர் பழுப்பு, அடர் பழுப்பு போன்ற நிறங்களில் கல்லூரி மாணவிகள் தங்களின் கூந்தல் நிறத்தை மாற்றிக் கொள்கிறார்கள். அது ஃபேஷனாக இருந்தாலும், முறையான பராமரிப்பின்றி அந்தக் கூந்தல் அதே நிறத்தில் வெளிறிப் போகும்போது ‘செம்பட்டை முடி’ என்றே அழைக்கப்படுகிறது.
‘‘ஜீவனே இல்லாமல் வறண்டு போயிருக்கும் இப்படிப்பட்ட முடியை உடையவர்கள் ‘தங்கள் கூந்தலும் ஒருநாள் அலையலையாய்ப் புரளுமா?’ என்று கவலைப்படுவார்கள். அந்தக் கவலைக்குத் தீர்வு உண்டு’’ என்கிறார், ‘அவள்’ வாசகிகளுக்காக அழகு டிப்ஸ்களை வழங்கிவரும் சந்தியாசெல்வி.
இந்த இதழில் அவர் பேசப்போவது, கூந்தல் பராமரிப்பு பற்றி!
முடிக்கு உடனடியாக ஆரோக்கியத் தோற்றம் தரவைக்கச் சுலபமான சிகிச்சை ஒன்று உண்டு.
பீட்ரூட்-1, மருதாணி-1 கப், கத்தா (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) – 2 கப், வெந்தயப் பவுடர் – 2 டீஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள்.
முதலில் பீட்ரூட்டை மசிய அரைத்துக் கொள்ளுங்கள். தண்ணீரை நன்றாகக் கொதிக்க வைத்து அதில், பீட்ரூட், கத்தா, வெந்தயப் பவுடர் போட்டு மூடி வைத்து இறக்குங்கள். இதன் சாறு தண்ணீரில் இறங்கி விடும். வெதுவெதுப்பு நிலையை அடைந்ததும் இந்தத் தண்ணீரை வடிகட்டி, மருதாணிப் பவுடர் கலந்து ஒரு இரவு வையுங்கள்.
மறுநாள் இந்தக் கலவையை கூந்தல் முழுக்கவும் பூசி, ஒரு மணி நேரம் கழித்துத் தலையை அலசுங்கள். தொடர்ந்து இப்படி நாலைந்து தடவை செய்தாலே கூந்தலின் நிறத்தில் நல்ல வித்தியாசம் தெரியும்.
‘இதையெல்லாம் செய்ய எங்களுக்கு நேரம் ஏதுங்க?’ என்பவர்களுக்கு கொஞ்சம் சுலபமான வைத்தியம் உண்டு. தேங்காயை நன்றாக அரைத்து, பால் எடுத்து, கூந்தலில் தேய்த்து, அரைமணி நேரம் கழித்துத் தலையை அலசுங்கள். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் கூந்தல் பளபளக்கும்.
குழந்தைகள் நீச்சல் குளத்தில் நீந்தும்போதும்கூட தண்ணீரில் குளோரின் கலந்திருப்பதால் முடி செம்பட்டையாகும். ஒவ்வொருமுறை நீந்தியபிறகும் முடியை நல்ல தண்ணீரில் நன்றாக அலச வேண்டும். தலைக்கு ‘ஷவர் கேப்’ எனப்படுகிற சிறு தொப்பி அணிந்தும் நீந்தலாம்.
முடி கருகருவென்று வளர்வதில்லை என்பது நிறையப் பேரின் கவலை. இதற்கு சுலபமான சில கை வைத்தியங்கள் உண்டு.
சோற்றுக் கற்றாழையை வெட்டி, வெந்தயத்தை அதன் வெள்ளைப் பகுதியில் தூவி, மூடி வையுங்கள். இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்துப் பார்த்தால் வெந்தயம் நன்கு முளை விட்டு இருக்கும். அந்த வெந்தயத்தை எடுத்து, நிழலில் காயவைத்து, தேங்காய் எண்ணெயில் போட்டு, இந்த எண்ணெயைத் தொடர்ந்து தடவி வந்தால் முடி கருகருவென்று வளரும். இது உடலுக்குக் குளிர்ச்சியும்கூட. சைனஸ், தலைவலி இருப்பவர்கள் மட்டும் இதைத் தேய்க்கக்கூடாது.
அவர்களுக்கான இன்னொரு வைத்தியம் சொல்லட்டுமா?
கறிவேப்பிலையையும் பெரிய நெல்லிக்காயையும் நன்கு அரைத்து வடை மாதிரி தட்டிக் கொள்ளுங்கள். இந்த வடைகளைச் சுத்தமான தேங்காய் எண்ணெயில் போட்டு வெயிலில் இரண்டு வாரம் வையுங்கள். பச்சை நிறத்தில் கிடைக்கிற அந்தத் தேங்காய் எண்ணெயைத் தொடர்ந்து உபயோகித்து வந்தால், கன்னங்கரேலென்ற அழகு கூந்தல் கிடைக்கும்.
பொடுகுத் தொல்லை பெரும் தொல்லை. ஒருநாள் தலையை அலசவில்லையென்றால்கூட அரிப்பெடுத்து, காலி பண்ணிவிடும். இந்தப் பொடுகைக் காலி பண்ண சில டிப்ஸ்..
வசம்பைத் தேங்காய் எண்ணெயில் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலைப்பகுதியில் படும்படி தேய்த்து, ஒரு மணி நேரம் ஊறவைத்து அலசி வந்தால் பொடுகு ஓடிப்போகும்.
தேங்காய் எண்ணெயுடன் வேப்பம்பூவைக் காய்ச்சி இந்த எண்ணெயைத் தொடர்ந்து தடவி வருவதும் நல்ல பலன் தரும்.
இன்னொரு வழியும் உண்டு. வேப்பிலை, வசம்பு, வால் மிளகு மூன்றையும் நன்கு அரைத்து, மயிர்க்கால் களிலும் தலையிலும் படும்படி, தடவி அரைமணி நேரம் கழித்துத் தலையை அலசுங்கள்.
‘‘அட.. இப்போல்லாம் நீங்க தலையில கை வைக்கிறதே இல்லையே..?!’’ என்று அக்கம்பக்கத்துத் தோழிகள் ஆச்சரியப்படுவார்கள்.

புதன், 18 நவம்பர், 2015

மீன் வளர்ப்பு

சிறிய குளத்தில் மீன் வளர்ப்பு
----------------------------------------
மீன் வளர்ப்புக்கு ஏக்கர் கணக்கில் குளம் தேவையில்லை. குறைந்த பரப்பிலான குளத்தில் விரால் மீன்களை வளர்த்து பலனடைந்துள்ளதாக பசுமை விகடனில் ஒரு கட்டுரை வந்துள்ளது. வேலூர் மாவட்டம் அண்ணாத்துரை அவர்களின் அனுபவமாக வந்துள்ள இந்தக் கட்டுரை தனியே ஒரு குளம் வெட்டி அவர் செய்துள்ள பணிகளைக் காட்டுகிறது.
குளங்களைக் குத்தகைக்கு எடுத்து அதில் மீன் வளர்த்து அனுபவம் பெற்ற இவர், விரால் வளர்ப்பில் இலாபம் உண்டு என்று கேள்விப்பட்டு கிணறு மற்றும் ஏரிகளில் வளர்த்து அதை உண்மை என்றும் அறிந்த இவர் தனது நிலத்தில் குளம் வெட்டி மீன் வளர்க்க ஆரம்பித்திருக்கிறார்.
வளர்ப்பு முறை
---------------------
ஐந்து சென்ட் நிலத்தில், எட்டு அடி ஆழ குளம் வெட்டி, இரண்டு டிராக்டர் களிமண் கொண்டு நிரப்பி… 5 அடி உயரத்துக்கு தண்ணீரை நிரந்தரமாக நிறுத்த வேண்டும். தண்ணீர் அதிகமாக நிறுத்தும்போது, வெயிலின் தாக்கம் குறைவாகவும், திருட்டுப் போகாமலும் இருக்கும். தண்ணீர் நிரப்பிய பிறகு 2,000 விரால் மீன்குஞ்சுகளைக் குளத்தில் விடவேண்டும். ஒரு மாத வயதுடைய குஞ்சுகளாகப் பார்த்து வாங்கி விடுவதுதான் நல்லது. அதற்கும் குறைவான வயதுடைய குஞ்சுகளை விட்டால்… சேதாரம் அதிகமாக இருக்கும். ஒரே அளவுள்ள குஞ்சுகளாக விடுவதும் முக்கியம். இல்லாவிட்டால், பெரியக் குஞ்சுகள், சிறியக் குஞ்சுகளைத் தின்றுவிடும். மீன்குஞ்சு விட்ட மறுநாள், தாமரை அல்லது அல்லிக் கிழங்குகளில் நான்கை ஏரிகளில் இருந்து எடுத்து வந்து, குளத்தின் நான்கு பகுதிகளிலும், கரையில் இருந்து ஐந்து அடி இடைவெளிவிட்டு, குளத்துக்குள் ஊன்றிவிட வேண்டும். கிழங்கு வளர்ந்து படர்ந்து விடும். அவற்றின் நிழல் குளிர்ச்சியாக இருக்கும். வெயில் நேரங்களில் மீன்கள் வந்து தங்கிக்கொள்ளும்.
தீவனச் சேதத்தைக் குறைக்கும் தெர்மாக்கூல்!
மீன்குஞ்சுகளுக்கு, தீவனம் கொடுப்பதற்கு தெர்மாக்கூல் அட்டையை தண்ணீரோடு ஒட்டி இருப்பது போன்று நான்கு இடங்களில் வைக்க வேண்டும். குச்சிகளை நட்டு, அதன் மேல் தெர்மாக்கூல் அட்டையைக் குத்தி வைக்கலாம். தெர்மாக்கூல் மீது தீவனத்தைப் போட வேண்டும். மீன்கள் தெர்மாக்கூல் மீது ஏறி, தீவனத்தைச் சாப்பிடும். இதனால் தீவன சேதாரம் ஏற்படாது.
கடலைப் பிண்ணாக்குத் தூளை ஆரம்பத்திலிருந்து 20 நாட்கள் வரை 2 கிலோவும்; அடுத்த 10 நாட்களுக்கு 6 கிலோவும்; அடுத்த 15 நாட்களுக்கு 10 கிலோவும் இட வேண்டும். அதற்கு பிறகு, தீவனத்துக்காக 10 கிலோ ஜிலேபி மீனைக் குளத்துக்குள் விடவேண்டும். இவற்றிலிருந்து உற்பத்தியாகும் மீன்குஞ்சுகளை, விரால் மீன்கள் சாப்பிட்டுக் கொள்ளும்.
45-ம் நாளுக்கு மேல் 75-ம் நாள் வரை தினமும் 10 கிலோ கோழிக்குடல்களை வேகவைத்து ஒரு அங்குல நீளமுள்ளதாக வெட்டிப் போட வேண்டும். 75-ம் நாள் முதல் 100 நாட்கள் வரை தினமும் 25 கிலோ; 100-வது நாளில் இருந்து 240-வது நாள் வரை (எட்டாம் மாதம் வரை) தினமும் 35 கிலோ என்ற அளவுகளில் கோழிக்குடலை வெட்டி, காலை, மாலை என்று இரண்டாகப் பிரித்து தீவனமாக இடவேண்டும்.
60-ம் நாள் கட்லா, ரோகு, மிர்கால் போன்ற வகைகளில் இரண்டு மாத வயதுடைய 500 குஞ்சுகளைக் குளத்தில்விட வேண்டும். இப்படி செய்யும்போது, மேல் பகுதியில் இருக்கும் புழுக்கள் மற்றும் தீவனங்களை சாப்பிட்டே இந்த குஞ்சுகள் எளிதாக வளர்ந்துவிடும்.
எட்டு மாதத்தில் முக்கால் கிலோ!
விரால் மீனை நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்க… மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தண்ணீரை மாற்ற வேண்டும். விராலைப் பொறுத்தவரை அம்மை நோய்தான் தாக்கும். அம்மைத் தாக்குதல் தென்பட்டால், 5 கிலோ மஞ்சள் தூளில், ஒரு கிலோ கல் உப்பைக் கலந்து, குளத்து நீரில் கலந்துவிட்டால் இரண்டு, மூன்று நாட்களில் சரியாகி விடும்.
இந்தப் பராமரிப்பு மட்டும் செய்தாலே… நான்கு மாதத்தில் 400 முதல் 500 கிராம் எடையும்; எட்டு மாதத்தில் முக்கால் கிலோ முதல் ஒரு கிலோ எடையும் வந்துவிடும்.’
ஐந்து சென்டில்… 1,25,000!
நிறைவாக விற்பனை, வருமானம் பற்றி விளக்க ஆரம்பித்த அண்ணாதுரை, ”5 சென்ட் குளத்துல விடப்பட்ட 2,000 மீன்குஞ்சுகள்ல பாதிக்குப் பாதி சேதாரமா போனாலும், 1,000 மீன் கிடைக்கும்.
எட்டு மாசத்துல சராசரியாக முக்கால் கிலோ அளவுக்கு வளர்ந்துடும்னு வெச்சுக்கிட்டா… மொத்தம் 750 கிலோ மீன்கள் கிடைக்கும். மொத்தமா விற்பனை செய்தா கிலோ 150 ரூபாய் விலையிலயும், நேரடியா விற்பனை செய்தா கிலோ 200 ரூபாய் விலையிலயும் விற்க முடியும். நான் நேரடியாத்தான் விற்கிறேன். கிலோ 200 ரூபாய் வீதம் 750 கிலோவுக்கு 1 லட்சத்தி 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.
60-ம் நாள் குளத்துல விட்ட ரோகு, கட்லா வகைகள்ல பாதிக்குப் பாதி சேதாரமா போனாலும், 250 மீன்கள் கிடைக்கும். இதுவும் சராசரியா முக்கால் கிலோ எடைனு வெச்சுக்கிட்டாலும்… மொத்தம் 187 கிலோ மீன் கிடைக்கும். கிலோ 100 ரூபாய் வீதம் விற்பனை செய்தா 18 ஆயிரத்து 700 ரூபாய் கிடைக்கும். ஆகமொத்தம் 5 சென்ட் நிலத்துல இருந்து 8 மாசத்துல 1 லட்சத்தி 68 ஆயிரத்தி 700 ரூபாய் கிடைக்கும். செலவெல்லாம் போக… 1 லட்சத்தி
25 ஆயிரம் ரூபாய் லாபமா கையில நிக்கும்’

காய்கறி மற்றும் எல்லாப் பயிர்களுக்கும் கெட்டுப்போன முட்டைகள், ஒரு சிறந்த உரம்

காய்கறி சாகுபடியில் விவசாயி அனுபவம
நான் தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் தாலுகா, பெருமாள் கவுண்டன்பட்டி என்னும் ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி. நான் என்னுடைய மாட்டுக் கொட்டகையில் பந்தல் அமைத்து ஆடிப் பெருக்கு அன்று இரண்டு நாட்டுச்சுரை விதைகளை ஒரு சிமென்ட் தொட்டியில் நடவு செய்து கவனமாக வளர்த்து வந்தேன். அந்த இரண்டு செடிகளுக்கும் மண்ணை மலடாக்கும் ரசாயன உரங்களை கொடுக்காமல் மண்ணை வளமாக்கும் ஜீவாமிர்தத்தையே உரமாகக் கொடுத்து வந்தேன். நான் கொடுத்த அந்த உரத்திற்கு பரிசாக அந்த இரண்டு சுரைச்செடிகளும் இரண்டரை அடி நீளத்தில் 19 காய்கள் காய்த்தன. அந்த சமயத்தில் என்னுடைய இரண்டு கோழிகள் குஞ்சு பொரித்ததில் எட்டு முட்டைகள் குழு முட்டை (கெட்டுப்போனது) ஆகிவிட்டன.
அதில் இரண்டு முட்டை களை செடிக்கு ஒன்று வீதம் வேரின் பக்கவாட்டில் சிறு குழி எடுத்து குழியில் முட்டைகளைப் போட்டு உடைத்து விட்டு மண்ணால் மூடி நீர் ஊற்றி பராமரித்து வந்தேன். இப்பொழுதான் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. ஐந்து நாள் கழித்து மாடியில் ஏறிநின்று கொடிகளை கவனித்தேன். வயதான அந்த கொடிகளில் சுமார் 50 பூக்களுக்கு மேல் பூத்திருந்தன. அந்த 50 பூக்களில் 18 பூக்கள் காயாக மாறி ஒரு வாரத்திற்குள் அசுர வேகத்தில் பெரிதாகி பறிப்புக்கு வந்தன. மீண்டும் ஆறுநாள் கழித்து முன்னைப் போலவே செடிக்கு ஒரு முட்டை வீதம் உரமாகக் கொடுத்தேன். மீண்டும் கொடிகளில் 55 பூக்கள் பூத்தன. அதில் 20 பூக்கள் காயாக மாறி 9 நாட்களில் பறிப்புக்கு வந்தன. மீண்டும் ஒரு வாரம் கழித்து செடிக்கு இரண்டு முட்டைகள் வீதம் உரமாகக் கொடுத்தேன்.
இப்பொழுது 70 பூக்களுக்கு மேல் பூத்தன. அதில் 24 பூக்கள் காயாக மாறி என்னை வியப்பில் ஆழ்த்தியது. மீண்டும் அதே முயற்சி, ஆனால் அந்த செடிகளுக்கு நித்திரை வந்து விட்டுது போலும், சித்திரை முடிய செடிகளும் நித்திரையில் ஆழ்ந்து விட்டன. அந்த இரண்டு சுரைச்செடிகளின் வாரிசுகளும் இந்த வருட ஆடியில் முளைத்து வளமாக வளர்ந்து வருகின்றன. அந்த இரண்டு சுரைச்செடிகளுக்கும் நான் கொடுத்த உரமோ 8 கெட்டுப்போன முட்டைகள். ஆனால் அந்த இரண்டு சுரைச்செடிகளும் எனக்குக் கொடுத்த வரவோ 81 சுரைக்காய்கள்.
இந்த சிறு முயற்சியின் மூலம் நாம் உணர்வது என்னவென்றால் காய்கறி மற்றும் எல்லாப் பயிர்களுக்கும் கெட்டுப்போன முட்டைகள், ஒரு சிறந்த உரம் என்பதை உணர்கிறோம். எனவே கோழி வளர்க்கும் விவசாயிகள் கெட்டுப்போன முட்டைகளை வீசி எறிந்து விடாமல் நம்முடைய பயிர்களுக்கே உரமாகக் கொடுக்க வேண்டும்.