திங்கள், 30 ஜனவரி, 2017

மன அழுத்தத்தைத் தவிர்க்கும் வழிகள்

தேவையற்ற மன அழுத்தத்தைத் தவிர்ப்போம்
எல்லா மன அழுத்தங்களையும் தவிர்க்க முடியாது. அதேபோல எல்லாவற்றையும் பொருட்படுத்தாமல் இருப்பதும் நல்லது அல்ல. இருப்பினும் மன அழுத்தம் ஏற்படுத்தக்கூடிய சில விஷயங்களைத் தவிர்ப்பதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.
‘நோ’ சொல்லிப் பழகுங்கள்:
மற்றவர்கள் சொல்கிறார்களே என்பதற்காக, அனைத்தையும் செய்யவேண்டியது இல்லை. உங்களின் திறன், வரையறை எவ்வளவு என்பதை முதலில் தெரிந்துகொண்டு அதில் உறுதியாக இருங்கள். பொதுவாழ்வோ, தனிப்பட்ட வாழ்வோ எதுவாக இருந்தாலும் உங்களால் முடியாத விஷயங்களில் கூடுதல் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டாம். இதனால், குறிப்பிட்ட காலத்தில், வாக்களித்த விஷயத்தைச் செய்ய முடியாமல் மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பைத் தவிர்க்க முடியும். கூடுதல் பொறுப்பு சுமத்தப்படும்போது, உங்கள் திறன் மற்றும் எல்லையை உணர்ந்து நாசூக்காக அதைத் தவிர்த்துவிடுங்கள்.
உங்களை மன அழுத்தத்துக்கு ஆளாக்கும் நபர்களைத் தவிர்த்திடுங்கள்:
தொடர்ந்து குறிப்பிட்ட நபரால், உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது என்றால், முடிந்தவரை அவரைத் தவிர்த்துவிடுங்கள். அவர் உங்கள் குடும்பத்தில் ஒருவர், உயர் அதிகாரி எனவே அவர்களைத் தவிர்க்க முடியாது என்ற நிலையில், அவர்களுடன் செலவிடும் நேரத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
சுற்றுப்புறச்சூழலை உங்கள் வசப்படுத்துங்கள்:
போக்குவரத்து நெரிசல் உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தினால், அலுவலகத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாகச் சென்றுவிடுங்கள். அல்லது போக்குவரத்து நெரிசல் குறைந்த சாலையைப் பயன்படுத்துங்கள். இரவு செய்தி கேட்கும்போது பதற்றம் ஏற்படுகிறது என்றால், டி.வி.யை அணைத்துவிடுங்கள். இதுபோன்று சுற்றுப்புறச்சூழ்நிலையை நமக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளும்போது, மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறையும்.
செய்யக்கூடியது, செய்யக் கூடாதவை பற்றிய அட்டவணை தயார்செய்யுங்கள்:
உங்களின் தினசரி வாழ்க்கையின் நடவடிக்கைகள், பொறுப்புகள், செய்யவேண்டிய வேலைகள் பற்றிய அட்டவணையை முன்கூட்டியே தயார் செய்துகொள்ளுங்கள். இதில் அதிகப்படியான நடவடிக்கைகள் இருந்தால் அதில், ‘எது மிகவும் அவசியமானது’, ‘எது செய்யவில்லை என்றாலும் பிரச்னை இல்லை’ என்பதைக் கண்டறியுங்கள். தேவையற்றது என்று நீங்கள் நினைப்பவற்றுக்கு அட்டவணையில் கடைசி இடம் கொடுங்கள், அல்லது அவற்றை நீக்கிவிடுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக