18 நவம்பர், 2015

மீன் வளர்ப்பு

சிறிய குளத்தில் மீன் வளர்ப்பு
----------------------------------------
மீன் வளர்ப்புக்கு ஏக்கர் கணக்கில் குளம் தேவையில்லை. குறைந்த பரப்பிலான குளத்தில் விரால் மீன்களை வளர்த்து பலனடைந்துள்ளதாக பசுமை விகடனில் ஒரு கட்டுரை வந்துள்ளது. வேலூர் மாவட்டம் அண்ணாத்துரை அவர்களின் அனுபவமாக வந்துள்ள இந்தக் கட்டுரை தனியே ஒரு குளம் வெட்டி அவர் செய்துள்ள பணிகளைக் காட்டுகிறது.
குளங்களைக் குத்தகைக்கு எடுத்து அதில் மீன் வளர்த்து அனுபவம் பெற்ற இவர், விரால் வளர்ப்பில் இலாபம் உண்டு என்று கேள்விப்பட்டு கிணறு மற்றும் ஏரிகளில் வளர்த்து அதை உண்மை என்றும் அறிந்த இவர் தனது நிலத்தில் குளம் வெட்டி மீன் வளர்க்க ஆரம்பித்திருக்கிறார்.
வளர்ப்பு முறை
---------------------
ஐந்து சென்ட் நிலத்தில், எட்டு அடி ஆழ குளம் வெட்டி, இரண்டு டிராக்டர் களிமண் கொண்டு நிரப்பி… 5 அடி உயரத்துக்கு தண்ணீரை நிரந்தரமாக நிறுத்த வேண்டும். தண்ணீர் அதிகமாக நிறுத்தும்போது, வெயிலின் தாக்கம் குறைவாகவும், திருட்டுப் போகாமலும் இருக்கும். தண்ணீர் நிரப்பிய பிறகு 2,000 விரால் மீன்குஞ்சுகளைக் குளத்தில் விடவேண்டும். ஒரு மாத வயதுடைய குஞ்சுகளாகப் பார்த்து வாங்கி விடுவதுதான் நல்லது. அதற்கும் குறைவான வயதுடைய குஞ்சுகளை விட்டால்… சேதாரம் அதிகமாக இருக்கும். ஒரே அளவுள்ள குஞ்சுகளாக விடுவதும் முக்கியம். இல்லாவிட்டால், பெரியக் குஞ்சுகள், சிறியக் குஞ்சுகளைத் தின்றுவிடும். மீன்குஞ்சு விட்ட மறுநாள், தாமரை அல்லது அல்லிக் கிழங்குகளில் நான்கை ஏரிகளில் இருந்து எடுத்து வந்து, குளத்தின் நான்கு பகுதிகளிலும், கரையில் இருந்து ஐந்து அடி இடைவெளிவிட்டு, குளத்துக்குள் ஊன்றிவிட வேண்டும். கிழங்கு வளர்ந்து படர்ந்து விடும். அவற்றின் நிழல் குளிர்ச்சியாக இருக்கும். வெயில் நேரங்களில் மீன்கள் வந்து தங்கிக்கொள்ளும்.
தீவனச் சேதத்தைக் குறைக்கும் தெர்மாக்கூல்!
மீன்குஞ்சுகளுக்கு, தீவனம் கொடுப்பதற்கு தெர்மாக்கூல் அட்டையை தண்ணீரோடு ஒட்டி இருப்பது போன்று நான்கு இடங்களில் வைக்க வேண்டும். குச்சிகளை நட்டு, அதன் மேல் தெர்மாக்கூல் அட்டையைக் குத்தி வைக்கலாம். தெர்மாக்கூல் மீது தீவனத்தைப் போட வேண்டும். மீன்கள் தெர்மாக்கூல் மீது ஏறி, தீவனத்தைச் சாப்பிடும். இதனால் தீவன சேதாரம் ஏற்படாது.
கடலைப் பிண்ணாக்குத் தூளை ஆரம்பத்திலிருந்து 20 நாட்கள் வரை 2 கிலோவும்; அடுத்த 10 நாட்களுக்கு 6 கிலோவும்; அடுத்த 15 நாட்களுக்கு 10 கிலோவும் இட வேண்டும். அதற்கு பிறகு, தீவனத்துக்காக 10 கிலோ ஜிலேபி மீனைக் குளத்துக்குள் விடவேண்டும். இவற்றிலிருந்து உற்பத்தியாகும் மீன்குஞ்சுகளை, விரால் மீன்கள் சாப்பிட்டுக் கொள்ளும்.
45-ம் நாளுக்கு மேல் 75-ம் நாள் வரை தினமும் 10 கிலோ கோழிக்குடல்களை வேகவைத்து ஒரு அங்குல நீளமுள்ளதாக வெட்டிப் போட வேண்டும். 75-ம் நாள் முதல் 100 நாட்கள் வரை தினமும் 25 கிலோ; 100-வது நாளில் இருந்து 240-வது நாள் வரை (எட்டாம் மாதம் வரை) தினமும் 35 கிலோ என்ற அளவுகளில் கோழிக்குடலை வெட்டி, காலை, மாலை என்று இரண்டாகப் பிரித்து தீவனமாக இடவேண்டும்.
60-ம் நாள் கட்லா, ரோகு, மிர்கால் போன்ற வகைகளில் இரண்டு மாத வயதுடைய 500 குஞ்சுகளைக் குளத்தில்விட வேண்டும். இப்படி செய்யும்போது, மேல் பகுதியில் இருக்கும் புழுக்கள் மற்றும் தீவனங்களை சாப்பிட்டே இந்த குஞ்சுகள் எளிதாக வளர்ந்துவிடும்.
எட்டு மாதத்தில் முக்கால் கிலோ!
விரால் மீனை நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்க… மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தண்ணீரை மாற்ற வேண்டும். விராலைப் பொறுத்தவரை அம்மை நோய்தான் தாக்கும். அம்மைத் தாக்குதல் தென்பட்டால், 5 கிலோ மஞ்சள் தூளில், ஒரு கிலோ கல் உப்பைக் கலந்து, குளத்து நீரில் கலந்துவிட்டால் இரண்டு, மூன்று நாட்களில் சரியாகி விடும்.
இந்தப் பராமரிப்பு மட்டும் செய்தாலே… நான்கு மாதத்தில் 400 முதல் 500 கிராம் எடையும்; எட்டு மாதத்தில் முக்கால் கிலோ முதல் ஒரு கிலோ எடையும் வந்துவிடும்.’
ஐந்து சென்டில்… 1,25,000!
நிறைவாக விற்பனை, வருமானம் பற்றி விளக்க ஆரம்பித்த அண்ணாதுரை, ”5 சென்ட் குளத்துல விடப்பட்ட 2,000 மீன்குஞ்சுகள்ல பாதிக்குப் பாதி சேதாரமா போனாலும், 1,000 மீன் கிடைக்கும்.
எட்டு மாசத்துல சராசரியாக முக்கால் கிலோ அளவுக்கு வளர்ந்துடும்னு வெச்சுக்கிட்டா… மொத்தம் 750 கிலோ மீன்கள் கிடைக்கும். மொத்தமா விற்பனை செய்தா கிலோ 150 ரூபாய் விலையிலயும், நேரடியா விற்பனை செய்தா கிலோ 200 ரூபாய் விலையிலயும் விற்க முடியும். நான் நேரடியாத்தான் விற்கிறேன். கிலோ 200 ரூபாய் வீதம் 750 கிலோவுக்கு 1 லட்சத்தி 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.
60-ம் நாள் குளத்துல விட்ட ரோகு, கட்லா வகைகள்ல பாதிக்குப் பாதி சேதாரமா போனாலும், 250 மீன்கள் கிடைக்கும். இதுவும் சராசரியா முக்கால் கிலோ எடைனு வெச்சுக்கிட்டாலும்… மொத்தம் 187 கிலோ மீன் கிடைக்கும். கிலோ 100 ரூபாய் வீதம் விற்பனை செய்தா 18 ஆயிரத்து 700 ரூபாய் கிடைக்கும். ஆகமொத்தம் 5 சென்ட் நிலத்துல இருந்து 8 மாசத்துல 1 லட்சத்தி 68 ஆயிரத்தி 700 ரூபாய் கிடைக்கும். செலவெல்லாம் போக… 1 லட்சத்தி
25 ஆயிரம் ரூபாய் லாபமா கையில நிக்கும்’

காய்கறி மற்றும் எல்லாப் பயிர்களுக்கும் கெட்டுப்போன முட்டைகள், ஒரு சிறந்த உரம்

காய்கறி சாகுபடியில் விவசாயி அனுபவம
நான் தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் தாலுகா, பெருமாள் கவுண்டன்பட்டி என்னும் ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி. நான் என்னுடைய மாட்டுக் கொட்டகையில் பந்தல் அமைத்து ஆடிப் பெருக்கு அன்று இரண்டு நாட்டுச்சுரை விதைகளை ஒரு சிமென்ட் தொட்டியில் நடவு செய்து கவனமாக வளர்த்து வந்தேன். அந்த இரண்டு செடிகளுக்கும் மண்ணை மலடாக்கும் ரசாயன உரங்களை கொடுக்காமல் மண்ணை வளமாக்கும் ஜீவாமிர்தத்தையே உரமாகக் கொடுத்து வந்தேன். நான் கொடுத்த அந்த உரத்திற்கு பரிசாக அந்த இரண்டு சுரைச்செடிகளும் இரண்டரை அடி நீளத்தில் 19 காய்கள் காய்த்தன. அந்த சமயத்தில் என்னுடைய இரண்டு கோழிகள் குஞ்சு பொரித்ததில் எட்டு முட்டைகள் குழு முட்டை (கெட்டுப்போனது) ஆகிவிட்டன.
அதில் இரண்டு முட்டை களை செடிக்கு ஒன்று வீதம் வேரின் பக்கவாட்டில் சிறு குழி எடுத்து குழியில் முட்டைகளைப் போட்டு உடைத்து விட்டு மண்ணால் மூடி நீர் ஊற்றி பராமரித்து வந்தேன். இப்பொழுதான் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. ஐந்து நாள் கழித்து மாடியில் ஏறிநின்று கொடிகளை கவனித்தேன். வயதான அந்த கொடிகளில் சுமார் 50 பூக்களுக்கு மேல் பூத்திருந்தன. அந்த 50 பூக்களில் 18 பூக்கள் காயாக மாறி ஒரு வாரத்திற்குள் அசுர வேகத்தில் பெரிதாகி பறிப்புக்கு வந்தன. மீண்டும் ஆறுநாள் கழித்து முன்னைப் போலவே செடிக்கு ஒரு முட்டை வீதம் உரமாகக் கொடுத்தேன். மீண்டும் கொடிகளில் 55 பூக்கள் பூத்தன. அதில் 20 பூக்கள் காயாக மாறி 9 நாட்களில் பறிப்புக்கு வந்தன. மீண்டும் ஒரு வாரம் கழித்து செடிக்கு இரண்டு முட்டைகள் வீதம் உரமாகக் கொடுத்தேன்.
இப்பொழுது 70 பூக்களுக்கு மேல் பூத்தன. அதில் 24 பூக்கள் காயாக மாறி என்னை வியப்பில் ஆழ்த்தியது. மீண்டும் அதே முயற்சி, ஆனால் அந்த செடிகளுக்கு நித்திரை வந்து விட்டுது போலும், சித்திரை முடிய செடிகளும் நித்திரையில் ஆழ்ந்து விட்டன. அந்த இரண்டு சுரைச்செடிகளின் வாரிசுகளும் இந்த வருட ஆடியில் முளைத்து வளமாக வளர்ந்து வருகின்றன. அந்த இரண்டு சுரைச்செடிகளுக்கும் நான் கொடுத்த உரமோ 8 கெட்டுப்போன முட்டைகள். ஆனால் அந்த இரண்டு சுரைச்செடிகளும் எனக்குக் கொடுத்த வரவோ 81 சுரைக்காய்கள்.
இந்த சிறு முயற்சியின் மூலம் நாம் உணர்வது என்னவென்றால் காய்கறி மற்றும் எல்லாப் பயிர்களுக்கும் கெட்டுப்போன முட்டைகள், ஒரு சிறந்த உரம் என்பதை உணர்கிறோம். எனவே கோழி வளர்க்கும் விவசாயிகள் கெட்டுப்போன முட்டைகளை வீசி எறிந்து விடாமல் நம்முடைய பயிர்களுக்கே உரமாகக் கொடுக்க வேண்டும்.

27 அக்டோபர், 2015

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது...

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது...
தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.
தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.


இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர்பாடல் ஒன்று.
சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்
கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை
நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை
நம்பிக் காண் .
இதன் விளக்கம் :-
இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில்[உடலில்]சோர்வு,
பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.
எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.
.
உத்தமம் கிழக்கு
ஓங்குயிர் தெற்கு
மத்திமம் மேற்கு
மரணம் வடக்கு
கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.
தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்.
மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும்.
வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.
இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி
தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன்,
இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும். மேலும் மல்லாந்து கால்களையும்,கைகளையும்
அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன்
(பிராண வாயு) உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும். குப்புறப் படுக்கக் கூடாது,
தூங்கவும் கூடாது. இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை
நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்துபடுத்து தூங்க வேண்டும்.
இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம்
வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான
வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும்.
இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.
வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும்.
இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும்.
இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்
சித்தர்கள் கூறியது அனைத்துமே நம் அனைவரின் நன்மைக்கே, இதை நாமும் பின்பற்றி பயன் பெருவோம்.

12 அக்டோபர், 2015

வலுவூட்டும் செவ்வாழைப்பழம்.

வலுவூட்டும் செவ்வாழைப்பழம்.

நரம்பு தளர்ச்சி குணமடையும்
நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும்.
குழந்தை பேறு தரும்
திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ நாடுவர். அவர்களுக்கு செவ்வாழை அருமருந்தாகும். குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
எளிமையுடன் எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப்பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன.
பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா, மற்றும் கியூபா எனக் கூறப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் 'சி' அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.
கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.
மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்
பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.
சொரி சிறங்கு நீங்கும்
சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும், செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து ஏழுநாட்களுக்கு சாப்பிட்டு வர சருமநோய் குணமடையும்.
தொற்றுநோய் தடுக்கப்படும்
தொற்று நோய் கிருமிகளைக் கொல்லும் அறிய சக்தி செவ்வாழைப்பழத்தில் உள்ளது. வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வர உடலில் தொற்றுநோய் பாதிப்பு கட்டுப்படும்

10 அக்டோபர், 2015

துளசி பயன்கள் !

துளசி பயன்கள் !
துளசியுடன் மிளகு, வெற்றிலை மற்றும் வேம்பு பட்டை ஆகியவற்றை சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் காய்ச்சல் குணமாகும். துளசி இலையை புட்டு போல அவித்து, இடித்து, பிளிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி குணமாகும். துளசி இலையை சாதரணமாக மென்றுத் தின்றால் ஜீரண சக்தி அதிகரிப்பதோடு, பசியும் அதிகரிக்கும்.

ஆடாதொடை பயன்கள்

ஆடாதொடை பயன்கள்
எல்லா இருமல் மருந்துகளும் ஆடாதொடையிலிருந்துதான் தயாரிக்கப்படுகின்றன. 100 கிராம் ஆடாதொடையை அரை லிட்டர் தண்ணீருடன் சேர்த்து காய்ச்சி 125 மில்லியாக வற்ற வைத்து வடிகட்டி அதனுடன் 100 கிராம் வெல்லத்தை போட்டு மீண்டும் அடுப்பேற்றி பாகுபதத்தில் இறக்கி குழந்தகளுக்கு கொடுத்தால் இருமல் குணமாகும். பேருகால கர்ப்பிணிகள் 8வது மாதம் முதல் இதன் வேரை கஷாயம் செய்து தினமும் குடித்து வந்தால் சுகப்பிரசவமாவது உறுதி. ஆடாதொடை இலையை நிழலில் காயவைத்து, பொடி செய்து காலை, மாலை பாலில் சேர்த்து குடித்து வந்தால் காரணமில்லாமல் வரும் இரத்த அழுத்தம், படபடப்பு குறையும்.

🌞🏃‍♂️ முக்கியமான 4 ஹீரோ ஹார்மோன்கள் - தினசரி எளிய பழக்கங்களால் சமநிலைப்படுத்துவது

  🌞🏃‍♂️ முக்கியமான 4 ஹீரோ ஹார்மோன்கள் 1. டோபமைன் (Dopamine) – வெற்றியின் ஹார்மோன் இது நம்மை மோட்டிவேட் செய்து, இலக்குகளை அடைய தூண்டுகி...